பிளஸ்-2 வரை அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் - சட்டசபையில் தகவல்


பிளஸ்-2 வரை அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் - சட்டசபையில் தகவல்
x
தினத்தந்தி 7 Sep 2019 12:00 AM GMT (Updated: 6 Sep 2019 11:31 PM GMT)

பிளஸ்-2 வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு கல்லூரியில் 50 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் கமலக்கண்ணன் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

*காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு நிலையத்தில் எம்.பி.ஏ. (சுற்றுலா மேலாண்மை) பிரிவு தொடங்குவதற்கான செயற்குறிப்பு அரசின் கருத்துரு உள்ளது.

*பல்கலைக்கழக மானியக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள பாடப்பிரிவுகள் வேலைவாய்ப்புகள் அடிப்படையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் தொடங்கப்படும்.

*ஆசிரியர், நூலகர், உடற்கல்வி இயக்குனர் ஆகிய பதவிகளில் உள்ள காலியிடங்கள் அனைத்தும் மாதமொன்றுக்கு ரூ.25 ஆயிரம் பணி ஊதியத்துடன் குறுகிய கால ஒப்பந்தத்தின்பேரில் நிரப்பப்படும்.

*அரசு பள்ளிகளில் பிளஸ்-2 வரை படித்த மாணவர்களுக்காக அனைத்து அரசு கல்லூரிகளிலும் 50 சதவீத சேர்க்கை இடங்களை ஒதுக்கீடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

*பெருந்தலைவர் காமராஜர் நிதியுதவி திட்டம் அரசு பள்ளி, கல்லூரிகளில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே வழங்க வரையறை செய்யப்படும். மற்ற மாணவர்களுக்கு வருவாய் அளவுகோல் நிர்ணயிக்கப்படும்.

*அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படும்.

*தீயணைப்பு துறையில் காலியாக உள்ள 44 தீயணைப்பு வீரர்கள், 5 டிரைவர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும்.

*மணிலா சாகுபடியாளர்களுக்கு செலவின மானியம் ரூ.5 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்க பரிசீலிக்கப்படும்.

*அனுமதியின்றி குழாய் கிணறுகளை பயன்படுத்தினால் முதல் முறையாக ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து தவறு செய்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும்.

*நடப்பாண்டில் 60 மின்மாற்றிகள் அமைக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கமலக்கண்ணன் பேசினார்.

Next Story