விநாயகர் சிலையை கரைக்க சென்ற 6 பேர் ஏரியில் மூழ்கி சாவு; ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்
நந்துர்பர் அருகே விநாயகர் சிலையை ஏரியில் கரைக்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
மும்பை,
மராட்டியத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழா 11 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கடந்த 2-ந் தேதி தொடங்கிய விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 12-ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது. மாநிலம் முழுவதும் பொதுஇடங்களிலும், வீடுகளிலும் வைக்கப்பட்டு இருக்கும் வித, விதமான விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்கு பிறகு நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நந்துர்பர் மாவட்டம் வாசில் கிராமத்தில் ஒரு வீட்டில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலையை கரைக்க நேற்று அந்த குடும்பத்தினர் சென்றனர்.
பிற்பகல் 3.30 மணி அளவில் அங்குள்ள ஏரியில் சிலையை கரைப்பதற்காக 6 பேர் தண்ணீரில் இறங்கினார். அப்போது அவர்கள் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது. இதனால் தண்ணீரில் நிலைகொள்ள முடியாமல் தவித்த அவர்கள் அபயக்குரல் எழுப்பினர். கரையில் இருந்தவர்கள் ஏரியில் இறங்கி காப்பாற்றுவதற்குள் ஒருவர் பின் ஒருவராக 6 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவர்கள் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பலியான அனைவரும் 16 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். விநாயகர் சிலை கரைப்பின் போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story