காங்கிரஸ் மூத்த தலைவர் ஹர்ஷவர்தன் பாட்டீல் முதல்-மந்திரியுடன் சந்திப்பு


காங்கிரஸ் மூத்த தலைவர் ஹர்ஷவர்தன் பாட்டீல் முதல்-மந்திரியுடன் சந்திப்பு
x
தினத்தந்தி 7 Sept 2019 5:11 AM IST (Updated: 7 Sept 2019 5:11 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் மூத்த தலைவர் ஹர்ஷவர்தன் பாட்டீல் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்து பேசினார். அவர் பா.ஜனதாவில் சேர இருப்பதாக பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மும்பை, 

மராட்டிய சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் ஆளும் பா.ஜனதா, சிவசேனாவில் இணைந்து வருகின்றனர். அந்த வரிசையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஹர்ஷவர்தன் பாட்டீலும் பா.ஜனதாவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. மேலும் அவரை மூத்த காங்கிரஸ் தலைவர்களால் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.

இந்தநிலையில், நேற்று ஹர்ஷவர்தன் பாட்டீல் திடீரென முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்து பேசினார்.

இது மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்-மந்திரியுடனான ஹர்ஷவர்தன் பாட்டீலின் சந்திப்பு அவர் பா.ஜனதாவில் இணையும் முடிவையே காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

ஹர்ஷவர்தன் பாட்டீல் 1995-ம் ஆண்டு முதல் 1999-ம் ஆண்டு வரை சிவசேனாவில் இருந்தார். பின்னர் காங்கிரசில் சேர்ந்த அவர் 15 ஆண்டுகாலம் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசில் மந்திரியாக இருந்தார். இந்தாப்பூர் தொகுதியில் இருந்து 4 முறை சட்டசபைக்கு தேர்வான அவர், கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது தேசியவாத காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார்.

நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து சந்திக்க உள்ள நிலையில் இந்தாப்பூர் தொகுதியில் மீண்டும் களமிறங்க ஹர்ஷவர்தன் பாட்டீல் திட்டமிட்டு இருந்தார். ஆனால் அந்த தொகுதியை தேசியவாத காங்கிரஸ் விட்டு கொடுக்க மறுப்பதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் தலையிட்டு சமரச முயற்சில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

Next Story