திட்டக்குடி, கொட்டாரக்குப்பத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


திட்டக்குடி, கொட்டாரக்குப்பத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 8 Sept 2019 4:00 AM IST (Updated: 7 Sept 2019 11:05 PM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடி, கொட்டாரக்குப்பத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திட்டக்குடி,

திட்டக்குடி பேரூராட்சிக்குட்பட்ட வதிஷ்டபுரம் கீழத்தெருவில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். ஆனால் ஒரே ஒரு குழாயில் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த குழாயிலும் கடந்த 4 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் அந்த தெரு மக்கள் கடும் அவதி அடைந்தனர். இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த தெரு பொதுமக்கள் நேற்று காலையில் காலி குடங்களுடன் ஒன்று திரண்டு திட்டக்குடி-விருத்தாசலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் திட்டக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுபிக்‌ஷா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், இது தொடர்பாக பேரூராட்சி உயர் அதிகாரிகளிடம் பேசி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு, அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆலடி அருகே உள்ள கொட்டாரக்குப்பம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆழ்துளை கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்மோட்டார் பழுதடைந்தது. இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யமுடியவில்லை. அருகில் உள்ள விவசாய கிணறுகளுக்கு சென்று பொதுமக்கள் தண்ணீர் பிடித்து வருகிறார்கள். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், மின்மோட்டார் சரிசெய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலையில் விருத்தாசலம்-பாலக்கொல்லை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் ஆலடி போலீசார் விரைந்து சென்று, பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை கலைந்துபோக செய்தனர். இதனால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story