போலி ஆவணம் மூலம் ரூ.2 கோடி நிலத்தை பறிக்க முயற்சி: ஓட்டல் அதிபரை மிரட்டிய - 2 ரவுடிகள் கைது


போலி ஆவணம் மூலம் ரூ.2 கோடி நிலத்தை பறிக்க முயற்சி:  ஓட்டல் அதிபரை மிரட்டிய - 2 ரவுடிகள் கைது
x
தினத்தந்தி 8 Sept 2019 4:15 AM IST (Updated: 7 Sept 2019 11:45 PM IST)
t-max-icont-min-icon

செங்குன்றம் அருகே போலி ஆவணம் மூலம் ஓட்டல் அதிபரிடம் ரூ.2 கோடி நிலத்தை பறிக்க முயன்ற ரவுடிகள் 2 பேர் சிக்கினர். மேலும் 6 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த பெரியபாளையத்தைச் சேர்ந்தவர் தணிகாசலம் (வயது 38). இவர் மீது 6 கொலை வழக்குகள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. சோழவரத்தை அடுத்த அருமந்தையைச் சேர்ந்தவர் சந்திரகுமார் (33). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர்கள் இருவரும் கூலிப்படை தலைவர்களாக தங்களது கூட்டாளிகளுடன் அப்பகுதியில் சுற்றி வந்துள்ளனர்.

இந்த 2 ரவுடிகளும் செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் மகாலட்சுமி நகரில் உள்ள சென்னை சூளை ஆண்டியப்பன் தெருவைச் சேர்ந்த ஓட்டல் அதிபரான உதயகுமார் (38) என்பவருக்கு சொந்தமான, ரூ.2 கோடி மதிப்பிலான காலி மனையை போலி பத்திரம் தயாரித்து அபகறிக்க முயன்றனர். இதைத் தட்டி கேட்ட உதயகுமாரை அவர்கள் 2 பேரும் சேர்ந்து மிரட்டியதாக தெரிகிறது.

இதுகுறித்து உதயகுமார் செங்குன்றம் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து, மாதவரம் துணை கமிஷனர் ரவளி பிரியா உத்தரவின்பேரில், புழல் உதவி கமிஷனர் ரவி மேற்பார்வையில் தனிப்படை போலீசார் தணிகாசலம், சந்திரகுமார் ஆகிய 2 ரவுடிகளையும் தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று 2 ரவுடிகளையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அதன்பின்னர், அவர்கள் 2 பேரையும் திருவொற்றியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவர்கள் கொடுத்த தகவலின் பேரில், அவர்களது கூட்டாளிகளான மாதவரத்தை சேர்ந்த பிரபாகரன், காவாங்கரையைச் சேர்ந்த மணிகண்டன், பார்த்திபன், சூர்யா, மற்றும் அம்பத்தூரை சேர்ந்த இன்பா உள்பட 6 பேரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த 2 ரவுடிகளையும் தனிப்படை அமைத்து உடனடியாக கைது செய்த போலீசாரை சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் பாராட்டினார்.

Next Story