ஈரோடு மாவட்ட அனைத்துத்துறை வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் - அமைச்சர்கள் பங்கேற்பு


ஈரோடு மாவட்ட அனைத்துத்துறை வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் - அமைச்சர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 7 Sep 2019 11:00 PM GMT (Updated: 7 Sep 2019 7:55 PM GMT)

ஈரோடு மாவட்ட அனைத்துத்துறை வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட அனைத்துத்துறைகளின் மூலம் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலக வளர்ச்சிமன்ற கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு தமிழக அரசின் வணிக வரி மற்றும் பதிவுத் துறை முதன்மை செயலாளரும், ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அதிகாரியுமான கா.பாலச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம்(ஈரோடு மேற்கு), கே.எஸ்.தென்னரசு(ஈரோடு கிழக்கு), வி.பி.சிவசுப்பிரமணி(மொடக்குறிச்சி), இ.எம்.ஆர்.ராஜா என்கிற கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் (அந்தியூர்), எஸ்.ஈஸ்வரன் (பவானிசாகர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

கூட்டத்தில் வேளாண்மை துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் விவசாயிகளுக் கான அரசு மானிய திட்டங்கள் குறித்த கையேட்டினை அமைச்சர்கள் வெளியிட்டனர்.

பின்னர் ஆய்வுக்கூட்டத்தின் போது அமைச்சர்கள் மற்றும் கண்காணிப்பு அதிகாரி ஆகியோர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் அறிவித்து செயல்படுத்தி வரும் அனைத்து மக்கள் நல திட்டங்களும் ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேளாண்மைத்துறையின் மூலம் அதிக அளவில் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு வட்டார அளவில் கூட்டம் நடத்தி, அரசு வழங்கும் நலத்திட்டங்களை பற்றி தெளிவாக எடுத்துக் கூற வேண்டும். தேவையான அளவில் விதைகள், உரங்கள் இருப்பில் உள்ளன.

தரமான விதைகளை உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு பயிற்சி வழங்க வேண்டும். சித்தோட்டில் விளையாட்டு கிராமம் அமைப்பது குறித்து நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும். வருவாய்த்துறையின் மூலம் புறம்போக்கு நிலங்கள் கண்டறியப்பட்டு, வீடுகள் இல்லாதவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டி தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கால்நடைகளுக்கு தேவையான அனைத்து தடுப்பூசிகள், மருந்துகள் இருப்பில் உள்ளது. அனைத்து கால்நடைகளுக்கும் முன்னதாகவே தடுப்பூசிகள் போட நடவடிக்கை எடுக்க வேண்டும். பர்கூர் மலைப்பகுதிக்கு செல்லும் மின்னழுத்தத்தை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சமூக நலத்துறையின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் இ-சேவை மையத்தில் பதிவு செய்யும் பொழுது தகுதியான மனுக்களை மட்டுமே பதிவேற்ற வேண்டும். முதல்-அமைச்சரின் குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட 54ஆயிரத்து 834 மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன், மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மு.பாலகணேஷ், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் (ெ-ாறுப்பு) பிரேமலதா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பி.தமிழ்செல்வி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ரமேஷ் உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story