கல்லட்டி மலைப்பாதையில் பழுதாகி 2 நாட்கள் நின்ற 108 ஆம்புலன்ஸ் - பொதுமக்கள் அதிருப்தி
கல்லட்டி மலைப்பாதையில் பழுதாகி 2 நாட்கள் நடுவழியில் நின்ற ஆம்புலன்சால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
மசினகுடி,
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராமபுற மக்கள் சிகிச்சைபெற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. உடல்நலக்குறைவு, சாலை விபத்து உள்ளிட்டவைகள் ஏற்படும் போது பாதிக்கப்படுபவர்களை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. சமீப காலமாக நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் மோசமான நிலையில் இயங்கி வருவதாக புகார் எழுந்தது. அதனை உறுதி செய்யும் விதமாக கல்லட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் நேற்று முன்தினம் மலையில் பழுதாகி நின்றது. இதனை டிரைவரால் சரிசெய்ய முடியவில்லை.
அதனை தொடர்ந்து அந்த வாகனம் அதே இடத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் கல்லட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மருத்துவ சிகிச்சை பெற ஆம்புலன்ஸ் வாகனம் இன்றி அவதி அடைந்தனர். பழுதாகி நடுவழியில் 2 நாட்கள் ஆம்புலன்ஸ் வாகனம் நின்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
அவசர காலத்தில் நோயாளிகளை அழைத்து செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களை முறையாக பராமரித்து வைத்திருந்தால் இது போன்ற சம்பவங்களை தவிர்க்க முடியும் என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். மேலும் 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் ஆம்புலன்ஸ் வாகனங்களை முறையாக பராமரித்து இயக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story