சொத்து வரி உயர்வை கண்டித்து கோவையில் 27-ந் தேதி முழுஅடைப்பு - மறியல் போராட்டம் - தி.மு.க. கூட்டணி கட்சிகள் தீர்மானம்


சொத்து வரி உயர்வை கண்டித்து கோவையில் 27-ந் தேதி முழுஅடைப்பு - மறியல் போராட்டம் - தி.மு.க. கூட்டணி கட்சிகள் தீர்மானம்
x
தினத்தந்தி 7 Sep 2019 11:30 PM GMT (Updated: 7 Sep 2019 8:41 PM GMT)

சொத்து வரி உயர்வை கண்டித்து கோவையில் வருகிற 27-ந் தேதி முழு அடைப்பு- மறியல் போராட்டம் நடத்துவது என்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை,

தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

இதில், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி, கோவை புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், மாரிசெல்வம், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன். காங்கிரஸ் கட்சி மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் வெ.ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுமுகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர்கள். பிரேம், தனபால், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு. ராமகிருட்டிணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

கோவை மாநகராட்சியில், பொதுமக்களை பெரிதும் பாதிக்கின்ற வகையில் உயர்த்திய 100 சதவீத சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். கோவை மாநகராட்சி நிர்வாகம், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த "சூயஸ்" என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கியுள்ள குடிநீர் பராமரிப்பு ஒப்பந்தத்தை தமிழக அரசும், கோவை மாநகராட்சியும் ரத்து செய்ய வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 27-ந் தேதி(வெள்ளி்க்கிழமை) கோவையில் முழு அடைப்பு மற்றும் மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது. அதற்கு முன்னதாக 16-ந் தேதி முதல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கூட்டங்கள் நடத்துவது மற்றும் தோழமை கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் அனைத்து நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு திரட்டுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆலோசனை கூட்டத்தின் முடிவில், மாநகர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், கோவை மாநகராட்சி பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்தவில்லை. குப்பைகள் மாநகராட்சி முழுவதும் மலைபோல் தேங்கி கிடக்கிறது. சுகாதார சீர்கேட்டின் புகலிடமாக கோவை மாநகராட்சி திகழ்கிறது. இப்படி இருக்க, 100 சதவீத வரி உயர்வு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

Next Story