மர்மகாய்ச்சல் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் தனிவார்டு


மர்மகாய்ச்சல் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் தனிவார்டு
x
தினத்தந்தி 8 Sept 2019 3:15 AM IST (Updated: 8 Sept 2019 2:12 AM IST)
t-max-icont-min-icon

மர்மகாய்ச்சல் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தயார்நிலையில் தனிவார்டு உள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுக்கம்பாறை, 

வேலூர் மாவட்டத்தில் சமீபத்தில் மழை பெய்தது. இதனால் அங்காங்கே முட்செடிகள் வளர்ந்தது. பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் கொசுக்கள் உற்பத்தி பலமடங்கு அதிகரித்தது. இதன் காரணமாக மாலை நேரங்களில் கொசுத்தொல்லை அதிகமாக காணப்படுவதால் பொதுமக்கள் தூக்கமின்றி அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பலருக்கு மர்ம காய்ச்சல், சாதாரண காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

அவர்கள் மருத்துவமனையில் உள்நோயாளிகளாகவும், புற நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காய்ச்சல் பாதித்தவர்களுக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்க சிறப்பு தனிவார்டு தயார் நிலையில் வைத்துள்ளனர்.

வேலூர் பென்லேன்ட் மருத்துவமனை அலுவலர் செந்தாமரைக்கண்ணன் கூறுகையில், காய்ச்சல் பாதித்தவர்கள் பலர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகின்றனர். மர்மகாய்ச்சல் கண்டறியப்பட்டவர்களுக்கு தனிவார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பலர் குணமாகி வீடு சென்றுள்ளனர். தனிவார்டில் பெண்களுக்காக 10 படுக்கைகளும், ஆண்களுக்கு 6 படுக்கைகளும் உள்ளது. தற்போது 11 பேர் அதில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றார்.

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி டீன் செல்வி கூறுகையில், மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவுகள் தயார் நிலையில் உள்ளது. நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாகும் பட்சத்தில் கூடுதலாக அதிக படுக்கைகள் கொண்ட சிறப்பு தனிவார்டுகள் அமைக்கப்படும். மர்மகாய்ச்சல் பாதிப்பு அடைந்து சிகிச்சைக்காக வருபவர்களுக்கு நிலவேம்பு கசாயம், பப்பாளிஇலை சாறு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் 24 மணி நேரமும் சூழற்சி முறையில் பணியில் உள்ளனர் என்றார்.

Next Story