பழுது பார்க்க மேலே ஏறியபோது மின்கம்பம் உடைந்ததால் கீழே விழுந்த ஊழியர் பலி
மின்கம்பத்தில் ஏற்பட்ட பழுதை அதன் மீது ஏறி சரி செய்ய முயன்ற மின் ஊழியர் கம்பம் உடைந்து விழுந்து அமுக்கியதில் பலியானார்.
பனப்பாக்கம்,
ஓச்சேரியை அடுத்த தர்மநீதி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 44). இவர் பனப்பாக்கத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை பனப்பாக்கத்தில் உள்ள ஒரு கியாஸ் குடோனுக்கு எதிரே உள்ள மின்கம்பத்தில் பழுது பார்க்க மேலே ஏறினார். சிமெண்டால் ஆன அந்த மின்கம்பத்தின் அடியில் சிமெண்டு கலவை பெயர்ந்து சேதமடைந்து காணப்பட்டுள்ளது.
ஆபத்தான நிலையில் இருந்த அந்த கம்பத்தில் அவர் பழுதுபார்த்துக்கொண்டிருந்தபோது திடீரென அடிப்பாகம் உடைந்தது. அப்போது நடராஜன் கீழே விழுந்தார். மின்கம்பம் அவர் மீது விழுந்தது.
உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து விட்டார்.
இந்த சம்பவம் குறித்து நெமிலி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பழுதுபார்க்க மின்கம்பத்தில் ஏறியபோது கம்பம் உடைந்து கீழே விழுந்து மின் ஊழியர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story