ஆறுகளில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தூர்வாரும் பணிகள் பின்னர் தொடங்கப்படும் - கலெக்டர் ஆனந்த் தகவல்
திருவாரூர் மாவட்டத்தில் ஆறுகளில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தூர்வாரும் பணிகள் பின்னர் தொடங்கப்படும் என கலெக்டர் ஆனந்த் கூறினார்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் விவசாய உற்பத்தியில் திருவாரூர் மாவட்டம் முதன்மை இடத்தில் உள்ளது. விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் விவசாய சார்ந்த தொழிலை நம்பியே உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் 27 ஆறுகளும், 6,962 கிளை வாய்க்கால்களும், 30 பாசன ஏரிகளும் உள்ளன.
மாவட்டத்தில் உள்ள அனைத்து பாசன நிலங்களும் காவிரி ஆற்றில் இருந்து கிடைக்கும் தண்ணீர் மூலமாகவும், வடகிழக்கு பருவமழையினால் கிடைக்கும் தண்ணீர் மூலமாகவும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மொத்தம் 3 லட்சத்து 78 ஆயிரத்து 199 ஏக்கர் நிலங்கள் காவிரி மற்றும் வெண்ணாறு மூலமாக பாசன வசதி பெறுகின்றன.
ஆறுகளும், வடிகால்களும் மிகக்குறைந்த தளமட்ட சாய்வு உள்ளதால் மழை காலங்களில் வடிகால் பிரச்சினை ஏற்பட்டு வெள்ளம் சூழ்வதால் பயிர்கள், வீடுகள், உயிரினங்கள் பாதிப்பு ஏற்படுகின்றது.
நீர் நிலைகளை பாதுகாத்தல் மற்றும் பராமரிப்பு செய்வதற்காக பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையில் காவிரி வடிநில கோட்டம், தஞ்சாவூர், வெண்ணாறு வடிநில கோட்டம் திருவாரூர் ஆகிய கோட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. 95 குடிமராமத்து பணிகள் ரூ.16 கோடியே 4 லட்சத்து 15 ஆயிரம் கட்டுமானம், அடைப்பு பலகை மற்றும் தூர்வாரும் பணிகள் செய்யப்பட உள்ளன. அனைத்து பணிகளும் இந்த மாதம் (செப்டம்பர்) இறுதியில் முடிக்கப்படும்.
குடிமராமத்து திட்ட பணிகளின் மூலம் 48 தூர்வாரும் பணிகள் ரூ.14 கோடியே 89 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தூர்வாரும் பணிகள் பாசன காலத்திற்கு பின்னர் தொடங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story