நண்பரின் பிறந்தநாளில் பரிதாபம்: கடலில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு 3 பேரின் கதி என்ன?


நண்பரின் பிறந்தநாளில் பரிதாபம்:  கடலில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு 3 பேரின் கதி என்ன?
x
தினத்தந்தி 7 Sep 2019 10:45 PM GMT (Updated: 7 Sep 2019 9:42 PM GMT)

திருவொற்றியூரில் கடலில் குளித்த 10-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். நீரில் மூழ்கிய சக மாணவர்கள் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவொற்றியூர்,

திருவொற்றியூரை அடுத்த மணலி பல்ஜிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ் (வயது 15). மணலி பாடசாலை தெருவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

சக மாணவர்களான மணலி மாத்தூரை சேர்ந்த தனுஷ் (15), சின்ன சேக்காட்டை சேர்ந்த ஜெயபாரதி (15), தாமரைக்குளம் பகுதியை சேர்ந்த கோகுல்நாத் (15), பெரிய தோப்பை சேர்ந்த சுனில் குமார் (15) உள்பட 8 பேர் ராகேஷின் வீட்டுக்கு சென்று நேற்று கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினர்.

பின்னர் ராகேஷ் மற்றும் நண்பர்கள் 8 பேரும் திருவொற்றியூர் கே.வி.கே.குப்பம் பகுதியில் கடற்கரை கரைக்கு சென்றனர். அப்போது தனுஷ் (15), ஜெயபாரதி (15), கோகுல்நாத் (15), சுனில்குமார் (15) ஆகியோர் கடலில் இறங்கி குளித்தனர். ராகேஷ் உள்பட மற்ற மாணவர்கள் கரையில் விளையாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது கடலில் எழுந்து வந்த ராட்சத அலை மாணவர்கள் 4 பேரையும் ஆழமான பகுதிக்கு இழுத்துச்சென்றது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற மாணவர்கள் கூச்சலிட்டனர். இதனை பார்த்த அப்பகுதி மீனவர்கள் உடனடியாக அங்கு ஓடிவந்து கடலுக்குள் குதித்து மாயமான மாணவர்களை தேடினார் கள்.

ஆனால் அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் மீனவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மாணவர் தனுஷ் உடல் கரை ஒதுங்கியது. நீரில் மூழ்கி மூச்சுத்திணறி அவர் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களின் பெற்றோரும், உறவினர்களும் அப்பகுதிக்கு உடனடியாக விரைந்து வந்தனர்.

கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்ட மற்ற 3 மாணவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை மீனவர்களும், போலீசாரும் தேடும் பணியில் ஈடுபட்டனர். நண்பரின் பிறந்தநாளில் பள்ளி மாணவன் கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story