நீர் மேலாண்மை திட்டம் முழுமையாக பலன் பெற கண்மாய், ஊருணிகளில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் - மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை


நீர் மேலாண்மை திட்டம் முழுமையாக பலன் பெற கண்மாய், ஊருணிகளில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் - மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 8 Sept 2019 3:45 AM IST (Updated: 8 Sept 2019 3:39 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் மத்திய அரசின் நீர் மேலாண்மை திட்டம் முழுமையாக பலன் பெற கண்மாய், ஊருணிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்,

வறட்சி மிகுந்த விருதுநகர் மாவட்டத்தில் 1,027 பெரிய மற்றும் சிறிய கண்மாய்கள் உள்ளன. மேலும் 900-க்கும் மேற்பட்ட ஊருணிகளும் உள்ளன. மத்திய, மாநில அரசுகளின் நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் நீர்வளத்தை பெருக்க ரூ.27 கோடி மதிப்பீட்டில் 65 பொதுப்பணித்துறை கண்மாய்களும், ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் 161 சிறு கண்மாய்களும் தலா ஒரு லட்சம் மதிப்பீட்டில் 913 ஊருணிகளும் குடிமராமத்து செய்யப்பட்டு வருகின்றன.

இதுதவிர சேவை மற்றும் தொண்டு நிறுவனங்களும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் நீர் நிலைகளை மராமத்து செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பல நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. மதுரை ஐகோர்ட்டு நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பலமுறை உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் மாவட்டத்தில் பல கண்மாய்கள், ஊருணிகள், நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமேலே உள்ளன. இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அருப்புக்கோட்டை அருகே வன்னியன் ஊருணியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி இந்த ஊருணியை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு கொண்டு வரவேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த ஊருணியை நிர்வகித்து வரும் குழுவினர் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளனர்.

கண்மாய்கள், வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்பு இருந்தால் மழை காலங்களில் கண்மாய்களுக்கான நீர் வரத்திலும், கண்மாய்களில் நீரை தேக்கி வைப்பதிலும் பாதிப்பு ஏற்படும். மேலும் கிராமங்களை ஒட்டியுள்ள ஊருணிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் ஊருணிகளில் நீரை தேங்கி வைக்காத நிலை ஏற்பட்டு கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே மத்திய அரசு, விருதுநகர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் மிக குறைவாக உள்ளது என கண்டறிந்து இம்மாவட்டத்தில் 3 ஆண்டுகளில் நீர் வளத்தை மேம்படுத்த நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

மத்திய,மாநில அரசுகள் தேவையான நிதி ஒதுக்கீடு செய்து நீர் வளத்தை மேம்படுத்த உத்தரவிட்டாலும், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்றாமல் விட்டு விட்டால் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் முயற்சிகள் முழு பலன் தர வாய்ப்பு இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் கண்மாய், ஊருணிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அவற்றை உடனடியாக அகற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

Next Story