மாணவரிடம் ரூ.10½ லட்சம் மோசடி: ஆசாமிக்கு வலைவீச்சு
மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி மாணவரிடம் ரூ.10½ லட்சம் மோசடி செய்த ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.
வசாய்,
பால்கர் மாவட்டம் நாலச்சோப்ரா கிழக்கு அம்பேவாடி பகுதியை சேர்ந்தவர் அசோக் குமார். இவரது மகன் விஷால். இவர் மருத்துவ கல்லூரியில் சேர விரும்பினார். அதற்கான நுழைவுத் தேர்விலும் நல்ல மதிப்பெண் பெற்று இருந்தார். இந்தநிலையில், அவருக்கு இ-மெயில் மூலம் ஹர்ஷ் கோத்தாரி என்பவர் அறிமுகமானர். அவர், தான் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் டாக்டராக இருப்பதாக தெரிவித்து இருந்தார். இதை பார்த்த மாணவர் விஷால், அவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஹர்ஷ் கோத்தாரி, டெல்லியில் உள்ள பிரபல தனியார் மருத்துவ கல்லூரியில் படிப்பதற்கு சீட் வாங்கி தருவதாக கூறினார்.
மேலும் அந்த கல்லூரிக்கு நன்கொடை, கல்வி கட்டணம் செலுத்துவற்கு ரூ.10 லட்சத்து 45 ஆயிரம் அனுப்பி வைக்கும்படி ஒரு வங்கி கணக்கை கொடுத்தார். இதை நம்பிய மாணவர் அவர் தெரிவித்த வங்கி கணக்கில் பணத்தை செலுத்தி உள்ளார். பின்னர் கடந்த மாதம் 23-ந் தேதி அசோக் குமார் மற்றும் விஷால் அவரை சந்திப்பதற்காக டெல்லி சென்றனர். எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டர் ஹர்ஷ் கோத்தாரியை தேடினர். ஆனால் அப்படி யாரும் அங்கு பணி புரியவில்லை என்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தை, மகன் இருவரும் நாலச்சோப்ராவிற்கு வந்து துலிஞ்ச் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரிடம் மோசடி செய்த ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story