மத்திய அரசின் 60 சதவீத நிதி பங்களிப்புடன் கர்நாடகத்தில் புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள் தொடங்க முடிவு
மத்திய அரசின் 60 சதவீத நிதி பங்களிப்புடன் கர்நாடகத்தில் புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் சிக்கமகளூரு, சிக்பள்ளாப்பூர், சித்ரதுர்கா, ஹாவேரி, யாதகிரி மற்றும் பாகல்கோட்டையில் ஆகிய 6 இடங்களில் புதிதாக மருத்துவ கல்லூரி தொடங்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அனுமதி வழங்க கோரி மத்திய அரசிடம் மாநில அரசு அனுமதி கேட்டு விண்ணப்பித்தது. இதற்கு மத்திய அரசின் தேசிய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த 6 கல்லூரிகள் தொடங்க ஆகும் மொத்த செலவில் 60 சதவீத நிதியை மத்திய அரசு வழங்குகிறது. ஒரு கல்லூரி தொடங்க ரூ.900 கோடி செலவாகிறது. இதில் புதிய கல்லூரிகளுக்கு மத்திய அரசு தலா ரூ.540 கோடி வழங்க உள்ளது. அடுத்த கல்வி ஆண்டு (2020-21)முதல் இந்த கல்லூரிகள் செயல்பட தொடங்கும் என்று கூறப்படுகிறது.
புதிதாக 6 கல்லூரிகள் தொடங்கப்படுவதால், கர்நாடக மாநிலத்திற்கு கூடுதலாக ஒரு கல்லூரிக்கு 150 இடங்கள் வீதம் மொத்தம் 900 மருத்துவ இடங்கள் கிடைக்கும். இந்த கல்லூரிகள் தொடங்கப்படும் பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கும்படி மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் 75 மருத்துவ கல்லூரிகளை தொடங்க மத்திய அரசு சமீபத்தில் முடிவு செய்தது. அவற்றில் தான் கர்நாடகத்திற்கு 6 கல்லூரிகள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story