பெங்களூரு மாநகராட்சி மேயர் தேர்தல் 27-ந் தேதி நடக்க வாய்ப்பு; அதிகாரத்தை கைப்பற்ற பா.ஜனதா வியூகம்


பெங்களூரு மாநகராட்சி மேயர் தேர்தல் 27-ந் தேதி நடக்க வாய்ப்பு; அதிகாரத்தை கைப்பற்ற பா.ஜனதா வியூகம்
x
தினத்தந்தி 8 Sept 2019 5:25 AM IST (Updated: 8 Sept 2019 5:25 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு மாநகராட்சி மேயர் தேர்தலுக்கான ஆயத்த பணிகள் தொடங்கி உள்ளன. இந்த தேர்தல் வருகிற 27-ந் தேதி நடக்க வாய்ப்புள்ளது. இதனால் அதிகாரத்தை கைப்பற்ற பா.ஜனதா வியூகம் வகுத்து வருகிறது.

பெங்களூரு,

பெங்களூரு மாநகராட்சிக்கு ஒவ்வொரு ஆண்டும் மேயர் தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம(எஸ்), பா.ஜனதா என்று எந்த கட்சிகளுக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக உருவானது.

இருப்பினும் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து பெங்களூரு மாநகராட்சியை கைப்பற்றின. அதன்படி கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூரு மாநகராட்சி மேயராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும், துணை மேயராக ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்தவர்களும் பொறுப்பு வகித்து வருகிறார்கள். தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கங்காம்பிகே மேயராக இருக்கிறார். ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த பத்ரேகவுடா துணை மேயராக இருக்கிறார்.

இந்த நிலையில் மேயர், துணை மேயர் ஆகியோரின் பதவிக்காலம் வருகிற 28-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் மாநகராட்சியின் புதிய மேயர் மற்றும் துணை மேயர் யார்? என்பதை தேர்ந்தெடுப்பதற்கான ஆயத்த பணிகள் தொடங்கி உள்ளன. வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு மண்டல கமிஷனர் ஹர்சகுப்தாவுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியல் சரிபார்க்கப்பட்டு வருகிறது.

இதனால் மாநகராட்சி மேயர் தேர்தல் வருகிற 28-ந் தேதி நடக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், 28-ந் தேதி மகாளயா அமாவாசை என்பதால் வருகிற 27-ந் தேதி மாநகராட்சி மேயர் தேர்தலை நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதனால் 27-ந் தேதி மேயர் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் மாநகராட்சி மேயர் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்படும்.

இந்த நிலையில், மேயர் பதவியை பெற பா.ஜனதா வியூகம் வகுத்து வருகிறது. அதாவது தகுதி நீக்கம் செய்யப்பட்ட முனிரத்னா, பைரதி பசவராஜ், சோமசேகர், கோபாலய்யா ஆகியோரின் ஆதரவு கவுன்சிலர்களின் ஆதரவை பெற்று மேயர் பதவியை பெற பா.ஜனதா வியூகம் வகுத்து வருகிறது.

இதுதவிர மாநிலத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி முறிந்ததை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பெங்களூரு மாநகராட்சியில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை கூட்டணி அமைக்க விடக்கூடாது என்பதிலும் பா.ஜனதா கவனம் செலுத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேநேரத்தில் மாநகராட்சி மேயர் பதவியை தக்க வைத்து கொள்ள காங்கிரசும் திட்டம் தீட்டி வருகிறது. இதனால் நடைபெற உள்ள மேயர் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story