திண்டிவனத்தில் துணிகரம், பஸ்சுக்காக காத்திருந்த மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு


திண்டிவனத்தில் துணிகரம், பஸ்சுக்காக காத்திருந்த மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 9 Sept 2019 3:45 AM IST (Updated: 8 Sept 2019 9:57 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் பஸ்சுக்காக காத்திருந்த மூதாட்டியிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டிவனம்,

காஞ்சீபுரம் மாவட்டம் அனுமந்தை அடுத்த புத்தேரி கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மனைவி சந்திரா(வயது 65). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டிவனத்தில் உள்ள உறவினர் ஒருவரின் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்தார். பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் சந்திரா சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு திண்டிவனம் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதி பேருந்து நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் சந்திரா கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை திடீரென பறித்துக் கொண்டு, அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டார். இதனால் நிலைதடுமாறிய சந்திரா கீழே விழுந்தார்.

இதில் லேசான காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்த புகாரின்பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச் சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். பஸ்சுக்காக காத்திருந்த மூதாட்டியிடம் ரூ.1¼ லட்சம் மதிப்புள்ள நகையை மர்மநபர் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story