காவிரியில் வெள்ள அபாயத்தை தவிர்க்க முக்கொம்பு கொள்ளிடம் அணையில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறப்பு


காவிரியில் வெள்ள அபாயத்தை தவிர்க்க முக்கொம்பு கொள்ளிடம் அணையில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறப்பு
x
தினத்தந்தி 9 Sept 2019 4:30 AM IST (Updated: 9 Sept 2019 12:35 AM IST)
t-max-icont-min-icon

காவிரியில் வெள்ள அபாயத்தை தவிர்க்க திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் தற்காலிக தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதுடன், புதிய கதவணை கட்டும் பணியும் பாதிக்கப்பட்டு உள்ளது.

ஜீயபுரம்,

அகண்ட காவிரியை காவிரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிக்கும் திருச்சி முக்கொம்பு மேலணையில் உள்ள நூறாண்டுகள் பழமைவாய்ந்த கொள்ளிடம் அணையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது அதன் 9 மதகுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. இதையடுத்து மதகுகள் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் தற்காலிக சீரமைப்பு பணிகளும், அணையின் மீதம் உள்ள 45 மதகுகளை பலப்படுத்தும் பணிகளும் ரூ.38 கோடி மதிப்பீட்டில் நடந்து முடிந்து உள்ளது. இது தவிர கொள்ளிடம் ஆற்றில் ரூ.387 கோடியில் புதிய கதவணை கட்டும் பணியும் நடந்து கொண்டிருந்தது.

இந்தநிலையில் கர்நாடக மாநிலத்தின் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டதையொட்டி தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமான மேட்டூர் அணை, அதன் முழு கொள்ளளவான 120 அடியை நேற்று முன்தினம் மதியம் எட்டியது. இதனை தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 60 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் நேற்று மாலை தண்ணீர் திறப்பு வினாடிக்கு 65 ஆயிரத்து 700 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

இதனால் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணை வழியாக முக்கொம்பு மேலணைக்கு வேகமாக வந்தடைந்தது. நேற்று நண்பகல் நிலவரப்படி முக்கொம்பு மேலணைக்கு வினாடிக்கு 42 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.

இதனால் வெள்ள அபாயத்தை தவிர்க்க காவிரியில் வினாடிக்கு 32 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. மீதம் உள்ள 10 ஆயிரம் கன அடி தண்ணீரும் ஏற்கனவே உடைப்பு ஏற்பட்ட கொள்ளிடம் அணையின் மீதம் உள்ள 45 மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டது.

மதகுகள் வழியாக வெளியேறிய தண்ணீர் கடல் அலை போல் இரைச்சல் ஏற்படுத்திய படி பாய்ந்து சென்றது. இதன் காரணமாக கொள்ளிடம் ஆற்றிற்குள் முக்கொம்பு சுற்றுலா மையத்தின் கரூர் சாலை முகப்பு பகுதியையும், வாத்தலை பகுதியையும் இணைப்பதற்காக ஜல்லிக்கற்கள் மற்றும் மணல் குவியல் மூலம் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த பாலம் மூழ்கின.

மேலும் புதிய கதவணை கட்டுமான பணியும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளது. புதிய கதவணைக்காக பூமிக்கு அடியில் சுமார் 18 மீட்டர் முதல் 24 மீட்டர் ஆழம் வரை இறக்கப்பட்ட கான்கிரீட்டுடன் கூடிய இரும்பு தூண்கள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. இதன் காரணமாக ஆற்றுக்குள் வேலை செய்து கொண்டிருந்த ராட்சத எந்திரங்கள் வெளியேற்றப்பட்டு கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

கொள்ளிடம் அணையின் வடக்கு பகுதியில் உள்ள 10 கண் மதகுகள் வழியாகவும் நேற்று காலை முதல் மாலை வரை தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் நிறுத்தப்பட்டு விட்டது. இது தவிர அய்யன், பெருவளை, புள்ளம்பாடி வாய்க்கால் பாசனத்திற்காக வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகப்படுத்தப்பட்டு இருப்பதால் திருச்சி, கரூர் உள்பட 12 மாவட்ட காவிரி கரையோர மக்களுக்கு ஏற்கனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இந்நிலையில் முக்கொம்பு மேலணையில் காவிரி, கொள்ளிடத்தில் தண்ணீரை பிரித்து அனுப்பும் பணியை திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ். சிவராசு நேற்று மதியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Next Story