சந்திரயான்-2 பின்னடைவு பற்றி விஞ்ஞானிகள் கலங்க வேண்டியதில்லை - புதுக்கோட்டையில் தொல்.திருமாவளவன் பேட்டி


சந்திரயான்-2 பின்னடைவு பற்றி விஞ்ஞானிகள் கலங்க வேண்டியதில்லை - புதுக்கோட்டையில் தொல்.திருமாவளவன் பேட்டி
x
தினத்தந்தி 8 Sep 2019 10:00 PM GMT (Updated: 8 Sep 2019 8:17 PM GMT)

சந்திரயான்-2 பின்னடைவு பற்றி விஞ்ஞானிகள் கலங்க வேண்டியதில்லை என புதுக்கோட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேந்திரிய வித்யாலயா பள்ளி தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்பட்டு இருந்தது அதிர்ச்சி அளிக்கிறது. கல்வி காவிமயமாவதை இந்த சம்பவம் உறுதிபடுத்துகிறது. இது போன்ற கேள்வி கேட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாடப்புத்தகத்தில் இருந்து சர்ச்சைக்குரிய வினா எழுப்பும் படியான பாடத்திட்டத்தை நீக்க வேண்டும். தெலுங்கானா கவர்னராக பதவி ஏற்ற தமிழிசை சவுந்தரராஜனுக்கு வாழ்த்துக்கள். பா.ஜ.க. தலைமை, தமிழிசை சவுந்தரராஜன் அரசியலில் ஈடுபட்டு கொண்டிருக்கும் வேளையில் அவருக்கு ஓய்வு கொடுக்கும் வகையிலேயே கவர்னர் பதவி வழங்கியது ஏனென்று தெரியவில்லை. துடிப்புடன் செயல்படும் தமிழிசைக்கு அரசியலில் இன்னும் தீவிரமாக செயல்பட மத்திய மந்திரி உள்ளிட்ட பதவிகளை வழங்கி இருக்கலாம். ராம்ஜெத்மலானி இழப்பு அரசியல் மற்றும் சட்டத்துறைக்கு பேரிழப்பு அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

தமிழக முதல்-அமைச்சர் வெளிநாட்டு பயணம் முடித்துக்கொண்டு திரும்பிவந்து அவர் தொழிலில் முதலீடு எவ்வாறு பெற்று உள்ளார் என்ற அறிக்கையை பொறுத்தே, அது குறித்து விமர்சனம் செய்ய முடியும். சிதம்பரத்தை போன்று ஸ்டாலினும் கைது செய்யப்படுவார் என்று பா.ஜ.க. தலைவர்கள் கூறிவருவது, அது அவர்களுடைய ஆசையாக இருக்கலாம். ஆனால் அந்த ஆசை நிறைவேறாது. இஸ்ரோ விஞ்ஞானிகள் படைத்திருப்பது மிகப்பெரிய சாதனை தான். சந்திரயான்-2 பின்னடைவு பற்றி விஞ்ஞானிகள் கலங்க வேண்டியதில்லை. தொடர்ந்து முயற்சிகளை விஞ்ஞானிகள் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story