ஓய்வூதியர்களுக்கு இலவச பஸ் பயண அட்டை வழங்க வேண்டும்: மாவட்ட மாநாட்டில் தீர்மானம்
ஓய்வூதியர்களுக்கு இலவச பஸ் பயண அட்டை வழங்க வேண்டும் என புதுக்கோட்டையில் நடைபெற்ற ஓய்வூதியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுக்கோட்டை,
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க புதுக்கோட்டை மாவட்ட 3-வது மாநாடு புதுக்கோட்டையில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட துணை தலைவர் முத்தையா தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சந்திரசேகரன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். அவரிடம் கட்டிட நிதியாக சுமார் ரூ.2 லட்சத்தை சங்க உறுப்பினர்கள் தனித்தனியாக வழங்கினர். இதில் மாவட்ட கருவூல அதிகாரி மூக்கையா, கூடுதல் கருவூல அதிகாரி அண்ணாத்துரை, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜபருல்லா, கவிஞர் முத்துநிலவன்உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநாட்டில் மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்குவதை போல மாநில அரசு ஓய்வூதியர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். தமிழக அரசு ஊதியக்குழு நிலுவை தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு மருத்துவப் படியாக மாதம் ரூ.ஆயிரம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3 லட்சம் வழங்க வேண்டும். ஓய்வூதியர் களுக்கு இலவச பஸ் பயண அட்டை வழங்க வேண்டும். புதிய தேசிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கையை திரும்பப்பெற வேண்டும்.
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். புதுக்கோட்டை நகரத்தில் ஷேர் ஆட்டோக்கள் இயக்க வேண்டும். புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். காவிரி, வைகை, குண்டாறு திட்டத்தை அமல் படுத்த வேண்டும். கந்தர்வகோட்டையில் சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story