காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு: கடல்போல காட்சியளிக்கும் மாயனூர் தடுப்பணை


காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு: கடல்போல காட்சியளிக்கும் மாயனூர் தடுப்பணை
x
தினத்தந்தி 8 Sep 2019 9:30 PM GMT (Updated: 8 Sep 2019 8:17 PM GMT)

காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் மாயனூர் தடுப்பணை கடல் போல காட்சியளிக்கிறது.

கிருஷ்ணராயபுரம், 

கர்நாடக மாநில அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பி காவிரி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளன. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்தின் நுழைவுப்பகுதியான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லை கடந்து மேட்டூர் அணையை வந்தடைகிறது. மேட்டூர் அணை நிரம்பி அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஏற்கனவே பாய்ந்தோடுகிற தண்ணீருடன் இந்த தண்ணீரும் சேர்ந்து நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் இருபுறமும் கரையை தொட்டபடி தண்ணீர் செல்கிறது. கரூர் அருகே வாங்கல் காவிரி ஆறு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணற்பரப்பாக காட்சியளித்தது. தற்போது ஆற்றில் பரந்து விரிந்து தண்ணீர் பாய்ந்தோடுகிறது. இதனை வாங்கல் காவிரி ஆற்றின் பாலத்தில் இருந்து பொதுமக்கள் பார்த்து மகிழ்ச்சியடைந்து செல்கின்றனர்.

கரூரில் மழை பெய்யாமல் வெயில் சுட்டெரித்தாலும் காவிரியில் தண்ணீர் பாய்ந்தோடுவதை கண்டு மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மாயனூர் தடுப்பணையில் தண்ணீர் தேங்கி நிற்பது கடல் போல காட்சியளிக்கிறது. இதனை பாலத்தில் இருந்து பொதுமக்கள் பார்த்து ரசித்ததை காணமுடிந்தது. மேலும் செல்போனில் பலர் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்ததையும் காணமுடிந்தது. மாயனூர் தடுப்பணைக்கு நேற்று காலை நிலவரப்படி 47 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து 46 ஆயிரத்து 200 கன அடி தண்ணீர் முக்கொம்பிற்கு திறந்து விடப்பட்டது. மாயனூர் தடுப்பணை பகுதியில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். காவிரி கரையோர பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடந்தது.

இதேபோல தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்று வழியாக மாயனூருக்கு செல்கிறது. இதில் செடிகள், கொடிகள் மற்றும் குப்பைகள் ஏராளமாக வந்தது. இதனை தவுட்டுப்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள், இளைஞர்கள் அகற்றி சுத்தம் செய்து வருகின்றனர்.

Next Story