கோவையில், எலெக்டிரிக்கல் கடையில் ரூ.2½ லட்சம் கொள்ளை - 2 வீடுகளில் 35 பவுன் நகை திருட்டு


கோவையில், எலெக்டிரிக்கல் கடையில் ரூ.2½ லட்சம் கொள்ளை - 2 வீடுகளில் 35 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 8 Sep 2019 10:00 PM GMT (Updated: 8 Sep 2019 8:18 PM GMT)

கோவையில் எலெக்டிரிக்கல் கடையின் ஷட்டரை உடைத்து ரூ.2½ லட்சத்தையும், கல்லூரி பேராசிரியர் வீடு உள்பட 2 பேரின் வீடுகளில் 35 பவுன் நகையையும் மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர்.

கோவை,

கோவை பூமார்க்கெட் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மதன்ராஜ் (வயது46). இவர் காட்டூ்ர் சோமசுந்தரா மில் ரோட்டில் எலெக்டிரிக்கல் கடை வைத்துள்ளார். இவர், இரவில் வழக்கம்போல் கடையை மூடும்போது, இரும்பு ஷட்டரின் இருபுறமும் பூட்டிவிட்டு மத்தியில் உள்ள பகுதியை பூட்டாமல் சென்றதாக தெரிகிறது.

அவர், மறுநாள் காலையில் கடையை திறக்க வந்தபோது, ஷட்டர் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்த போது மேஜை டிராயரில் இருந்த ரூ.2½ லட்சத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

இது குறித்து காட்டூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதை யடுத்து அங்கிருந்த கண் காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், டிப்டாப் ஆக உடையணிந்த 3 ஆசாமிகள் ஷட்டரை உடைத்து பணத்தை திருடி பையில் வைத்துக்கொண்டு ஜாலியாக பேசியபடி தப்பிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதை அடிப்படையாக வைத்து திருட்டு ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோவை ராமநாதபுரம் சிவராம் நகரை சேர்ந்தவர் ஜெகதீசன் (40). இவர், கோவையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக வேலை செய்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார்.

அவர், இரவில் வீடு திரும்பி போது முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 19½ பவுன் தங்கநகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

கோவை சாய்பாபாகாலனி கே.கே.புதூர் ராமலிங்கா நகரை சேர்ந்தவர் ரமேஷ் ராஜா (62). தனியார் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று இவர், வீ்ட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் வேலைக்கு சென்றார். வேலை முடிந்ததும், மாலையில் வீட்டுக்கு திரும்பி போது பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்த போது பீரோவை உடைத்து 15½ பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் சாய்பாபாகாலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த 2 வீடுகளிலும் மொத்தம் 35 பவுன் நகை திருட்டு போய் உள்ளது.

கோவை நகரில் கடந்த சில நாட்களாக வீடு புகுந்து திருடிச்செல்லும் குற்றங்கள் அதிகரித்து உள்ளது.

இது போன்ற திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து கைது செய்ய போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story