தூத்துக்குடி மாவட்டத்தில் 179 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு


தூத்துக்குடி மாவட்டத்தில் 179 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
x
தினத்தந்தி 9 Sept 2019 3:15 AM IST (Updated: 9 Sept 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் 179 விநாயகர் சிலைகள் நேற்று கடலில் கரைக்கப்பட்டன.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்து வந்தது. இந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் வழிபாடு முடிக்கப்பட்டு நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். அதன்படி இந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புறங்களில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் கடலில் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

நேற்று காலை முதல் தூத்துக்குடி, சிப்காட் பகுதியில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டு இருந்த 57 விநாயகர் சிலைகளும் ஒன்றன்பின் ஒன்றாக மேள தாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. இந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் தூத்துக்குடி சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள தபசு மண்டபத்துக்கு வந்தன. அங்கு இருந்து விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்துக்கு விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டி தலைவர் நம்பிராஜன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சிவகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சிவலிங்கம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி மாநில பேச்சாளர் மணிவாசகம், நெல்லை கோட்ட செயலாளர் சக்திவேலன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொழில்அதிபர்கள் பாண்டியன், மூக்கையா ஆகியோர் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

ஊர்வலத்தில் இந்து முன்னணி நெல்லை கோட்ட இளைஞர் முன்னணி செயலாளர் ராகவேந்திரா, விநாயகர் சதுர்த்தி கமிட்டி துணைத்தலைவர் மாரியப்பன், வக்கீல் கருப்பசாமி, ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் சந்தோசம், பா.ஜனதா கட்சி மாவட்ட பொதுச் செயலாளர் சிவராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேற்கு மண்டல துணைத்தலைவர் கெங்கன்ராஜ் நன்றி கூறினார்.

தொடர்ந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் மேள தாளத்துடன் நடந்தது. ஊர்வலம் காசுக்கடைபஜார், 1-ம் கேட், மட்டக்கடை, வடக்கு கடற்கரை சாலை வழியாக திரேஸ்புரம் சங்குமுக விநாயகர் கடற்கரையை வந்தடைந்தது. அங்கு இளைஞர்கள் விநாயகர் சிலைகளை ஒவ்வொன்றாக கடலுக்குள் எடுத்து சென்றனர். தகுந்த பாதுகாப்புடன் கடலில் ஆழமான பகுதிக்கு கொண்டு சென்று கரைத்தனர்.

இதே போன்று இந்து மக்கள் கட்சி சார்பில் வைக்கப்பட்டு இருந்த 10 விநாயகர் சிலைகள் மற்றும் ஏராளமான சிறிய விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் கரைக்கப்பட்டது.

புதுக்கோட்டை பகுதியில் உள்ள 8 விநாயகர் சிலைகள், முத்தையாபுரம், பொன்னாண்டி நகர், கிருஷ்ணாநகர், ராஜீவ்நகர், நேருஜிநகர், அத்திமரப்பட்டி, பாரதிநகர் உள்ளிட்ட பகுதியில் வைக்கப்பட்டு இருந்த 19 விநாயகர் சிலைகளும் முத்தையாபுரத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. இந்த ஊர்வலத்துக்கு இந்து முன்னணி மாநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாதவன் தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாநகர் மாவட்ட பார்வையாளர் சிவக்குமார், மாவட்ட பேச்சாளர் ஆறுமுகம், இந்து அன்னையர் முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல செயற்குழு உறுப்பினர் பாலா வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி மாநில பேச்சாளர் மணிவாசகம் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலம் சுனாமிகாலனி, சூசைநகர் வழியாக துறைமுக கடற்கரையை வந்தடைந்தது. அங்கு அனைத்து சிலைகளும் கடலில் கரைக்கப்பட்டன. விழாவையொட்டி சூசைநகரில் இருந்து பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். முன்னதாக ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

நேற்று தூத்துக்குடி கடற்கரைகளில் மொத்தம் 94 பெரிய விநாயகர் சிலைகளும், வீடுகளில், கோவில்களில் வைக்கப்பட்டு இருந்த ஏராளமான சிறிய விநாயகர் சிலைகளும் கடலில் கரைக்கப்பட்டன

விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான புதூர், சங்கரலிங்காபுரம், கரிசல்குளம், காடல்குடி, கே.சுந்தரேசபுரம், கமலாபுரம், கந்தசாமிபுரம், விருசம்பட்டி, சூரங்குடி உள்ளிட்ட பகுதிகளில் 66 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வந்தது. இந்த சிலைகள் அனைத்தும் நேற்று மாலையில் வாகனங்கள் மூலம் வேம்பார் கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு, கடலில் கரைக்கப்பட்டது. விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர் தலைமையில் விளாத்திகுளம் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை, எட்டயபுரம் இன்ஸ்பெக்டர் கலா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

கயத்தாறு, நாகலாபுரம், தெற்கு இலந்தைகுளம், வடக்கு இலந்தைகுளம், குமாரகிரி உள்ளிட்ட 19 கிராமங்களில் வைக்கப்பட்டு இருந்த 19 சிலைகளும் நேற்று திருச்செந்தூர் கடலில் கரைப்பதற்காக வாகனங்களில் ஏற்றி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அனைத்து சிலைகளும் கயத்தாறு அகிலாண்டஈசுவரி அம்மன் கோவில் முன்பு கொண்டு வரப்பட்டு, பின்னர் அங்கு இருந்து ஊர்வலமாக கயத்தாறு கோட்டை பிள்ளையார் கோவில் தெரு வழியாக பழைய கடம்பூர் ரோட்டுக்கு வந்தது. அங்கிருந்து காந்தாரி அம்மன் கோவிலுக்கு புறப்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை அங்கு அனுமதிக்கவில்லை. இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் ஊர்வலம் ஆஸ்பத்திரி சாலை வழியாக திருநீலகண்ட ஈசுவரர் ஆலயத்துக்கு சென்றது. அங்கு வழிபாடுகள் முடிந்த பின்னர் சிலைகள் அனைத்தும் திருச்செந்தூருக்கு கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பெரியசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாரிகாளை, சங்கரவேல், ஒன்றிய தலைவர் ராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் ராமசந்திரன், பா.ஜனதா ஒன்றிய தலைவர் ஆதிநாராயணன், நகர தலைவர் ராஜா, நீதிபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story