மேற்கு மராட்டியத்தில் கனமழை: கிருஷ்ணா நதியில் மீண்டும் வெள்ளம் - 500 குடும்பங்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றம்


மேற்கு மராட்டியத்தில் கனமழை: கிருஷ்ணா நதியில் மீண்டும் வெள்ளம் - 500 குடும்பங்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றம்
x
தினத்தந்தி 9 Sept 2019 3:45 AM IST (Updated: 9 Sept 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு மராட்டியத்தில் கன மழை காரணமாக கிருஷ்ணா நதியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 500 குடும்பங்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

மும்பை,

மராட்டியத்தில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக மேற்கு மராட்டிய பகுதியில் உள்ள கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக சாங்கிலி, கோலாப்பூர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்த மழையில் பலர் உயிரிழந்ததுடன், கிட்டத்தட்ட 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த பாதிப்பிற்கு கிருஷ்ணா நதிக்கிடையே கர்நாடகாவில் அமைக்கப்பட்டுள்ள அல்மாட்டி அணை திறக்கப்படாததே முக்கிய காரணமாக கூறப்பட்டது.

இதையடுத்து மராட்டிய அரசின் கோரிக்கையை ஏற்று, கர்நாடக அரசு அல்மாட்டி அணையில் இருந்து அதிகப்படியான நீரை திறந்துவிட்டது.

தற்போது நிலைமை சீரடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக கோலாப்பூர் மற்றும் சத்தாரா மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் கிருஷ்ணா நதியின் கிளை நதிகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. இதனால் மீண்டும் கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.

இதன்காரணமாக மராட்டியம் சார்பில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அல்மாட்டி அணையில் இருந்து கூடுதல் நீரை திறந்துவிடமாறு கர்நாடக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று கர்நாடக அரசு நேற்று வெளியேற்றும் நீரின் அளவை அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், நேற்று பல்வேறு துணை நதிகளின் நீர் நிலைகள் உயர்ந்துள்ளதால் கோலாப்பூர் மாவட்டத்தின் ஷிரோல் மற்றும் கார்வீர் தாலுகாக்களில் இருந்து சுமார் 500 குடும்பங்கள் மற்றும் கால்நடைகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Next Story