அசேஷம் ஊராட்சியில் தார் சாலைகள் அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


அசேஷம் ஊராட்சியில் தார் சாலைகள் அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 9 Sept 2019 3:15 AM IST (Updated: 9 Sept 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

அசேஷம் ஊராட்சியில் தார் சாலைகள் அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மன்னார்குடி, 

மன்னார்குடி நகரின் புறநகர் பகுதியாக அசேஷம் ஊராட்சி உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான குடியிருப்புகள் அசேஷம் பகுதியில் உருவாகி உள்ளன. ஆனால் அதற்கு ஏற்ப அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா? என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அசேஷம் பகுதியில் அய்யப்பன் நகர், பாரதிதாசன் நகர், ராஜராஜன் நகர், கிருஷ்ணா நகர் உள்ளிட்ட ஏராளமான குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இந்த பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இதில் பெரும்பான்மையான பகுதிகளில் உள்ள சாலைகள் இன்னும் மண் சாலைகளாக காட்சியளிக்கின்றன. இருக்கும் ஓரிரு தார் சாலைகளும் குண்டும், குழியுமாக உள்ளன. சிறிது மழை பெய்தாலே இங்கு உள்ள மண் சாலைகளில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறி பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோர் சேறும் சகதியான சாலைகளில் வழுக்கி விழும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

நகருக்கு இணையாக வளர்ந்துள்ள அசேஷம் ஊராட்சியில் அடிப்படை வசதியான சாலை வசதியே பூர்த்தி அடையாமல் மண் சாலைகளாக இருப்பது பொதுமக்களுக்கு பெரும் சிரமங்களை கொடுத்து வருகிறது.

பெருகிவரும் மக்கள் தொகையையும் பெருகிவிட்ட குடியிருப்புகளையும் மனதில் கொண்டு சம்பந்தப்பட்ட துறையினர் அசேஷம் பகுதியில் மண் சாலைகளை தார் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Next Story