செய்யாறில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் - கடையை மூட கலெக்டர் உத்தரவு
செய்யாறில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக கடையை மூட கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டார்.
செய்யாறு,
செய்யாறு டவுன் காந்தி சாலை மார்க்கெட் பகுதியில் ஏற்கனவே ஒரு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு மது விற்பனை நடந்து வருகிறது. அதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்படுவதும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதனால் அங்கு செயல்படும் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் அதே பகுதியில் மேலும் ஒரு டாஸ்மாக் கடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதனை அறிந்த பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் மனு அனுப்பினர்.
தொடர்ந்து இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகி சரவணன் தலைமையில் பொதுமக்கள் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை பூட்டி கடைக்கு முன்பாக விநாயகர் சிலையை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நெடுஞ்சாலைக்கு மிக அருகிலும், பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளதாலும் புதிதாக திறக்கப்பட்ட கடையை மூட மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story