சேதமடைந்த வேலாயுதம்பாளையம் தடுப்பணையில் கலெக்டர் ஆய்வு


சேதமடைந்த வேலாயுதம்பாளையம் தடுப்பணையில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 9 Sept 2019 4:00 AM IST (Updated: 9 Sept 2019 2:15 AM IST)
t-max-icont-min-icon

சேதமடைந்த வேலாயுதம்பாளையம் தடுப்பணையை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்தார்.

மங்கலம்,

மங்கலத்தை அடுத்த வேட்டுவபாளையம் பகுதியில் பல ஏக்கர் பரப்பில் வேட்டுவபாளையம் குளம் உள்ளது. இந்த குளத்திற்கு வேலாயுதம்பாளையம் அருகே உள்ள தடுப்பணையில் இருந்து பிரிவு வாய்க்கால் வழியாக தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. தற்போது வேலாயுதம்பாளையம் தடுப்பணை உடைந்து சிதலமடைந்து காணப்படுகிறது.

பிரிவு வாய்க்காலில் சில பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாலும் குளத்திற்கு தண்ணீர் வருவதில்லை. இதனால் திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் மங்கலம் மேற்கு ரோட்டரி சங்கமும், வேட்டுவபாளையம் சுற்றுவட்டார பகுதி விவசாயிகளும் கடந்த மாதம் கோரிக்கை மனு அளித்தனர்.

அதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் தெற்கு தாசில்தார் வேலாயுதம்பாளையம் தடுப்பணை நீர்வழிப்பாதையை ஆய்வு செய்து அதற்கான அறிக்கையை கலெக்டரிடம் சமர்ப்பித்தார். இதையடுத்து நேற்று வேலாயுதம்பாளையம் தடுப்பணை பகுதியையும், வேட்டுவபாளையம் குளத்துக்கு வரும் நீர்வழிப்பாதையும் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் கூறும் போது, வேட்டுவபாளையம் குளத்துக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மேற்கு ரோட்டரி சங்கத்தினர்,கலெக்டரிடம் வேலாயுதம்பாளையம் தடுப்பணை கட்டுவதற்கான முழு செலவையும் ஏற்று கொள்வதாக தெரிவித்தனர். இதில் பல்லடம் கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ., சூலூர் தொகுதி எம்.எல்.ஏ. கந்தசாமி, தெற்கு தாசில்தார் மகேஷ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனாட்சி, கனகராஜ், மேற்கு ரோட்டரி சங்க தலைவர் ஏ.கோபி நடராஜமூர்த்தி, செயலாளர் ஆர்.கே.ஆர்.ரகுபதி, பொருளாளர் தனபால், ரோட்டரி முன்னாள் தலைவர் கே.பாலசுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story