பாம்பன் அருகே 7 தீவுகளில் அதிகஅளவில் டால்பின்கள் - வனத்துறை அதிகாரி தகவல்


பாம்பன் அருகே 7 தீவுகளில் அதிகஅளவில் டால்பின்கள் - வனத்துறை அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 9 Sept 2019 4:15 AM IST (Updated: 9 Sept 2019 2:56 AM IST)
t-max-icont-min-icon

குருசடை தீவு உள்பட 7 தீவுகளில் டால்பின்கள் அதிகஅளவில் உள்ளதாக வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே குருசடை தீவு முதல் தூத்துக்குடி வரையிலும் உள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள 21 தீவுகளை சுற்றிலும் பவளப்பாறைகள், ஆமை, கடல்விசிறி, டால்பின், கடல் பசு உள்ளிட்ட 3600 வகையான அரிய கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அதுபோல் இந்த 21 தீவில் பாம்பன் அருகே குருசடை, சிங்கிலி, முயல்தீவு, மனோலி, மனோலிபுட்டி, புள்ளிவாசல், பூமரிச்சான் ஆகிய 7 தீவுகளும் மண்டபம் வனச்சரக அலுவலக கட்டுப்பாட்டில் வருகிறது.

இந்த நிலையில் பாம்பன் குந்துகால் கடற்கரை அருகே உள்ள குருசடை தீவை ஒட்டியுள்ள கடல் பகுதியில் நேற்று ஏராளமான டால்பின்கள் 2 மணி நேரத்திற்கு மேலாக விளையாடி கொண்டிருந்தன. அதில் ஒரு சில டால்பின்கள் கடல் நீரில் துள்ளிக்குதித்து விளையாடின. கடலில் வேகமாக நீந்தி சென்ற மீன்களை கவ்விப்பிடித்த படியும் நீந்தி கொண்டிருந்தன. டால்பின்கள் கூட்டமாக விளையாடி கொண்டிருந்ததை அந்த வழியாக மீன்பிடிக்க சென்ற நாட்டுப்படகு மீனவர்களும் பார்த்து ரசித்தனர்.

இதுபற்றி வனத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள 21 தீவுகளை சுற்றிலும் 3000-த்திற்கும் மேற்பட்ட அரிய கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. தமிழக கடல் பகுதிகளிலேயே மன்னார் வளைகுா கடல் பகுதிகளில் தான் அதிகமான டால்பின்கள் உள்ளன. அதிலும் மண்டபம் வனச்சரகத்திற்குட்பட்ட 7 தீவுகளிலும் டால்பின்கள் அதிகம் உள்ளன. அதில் குருசடை தீவு கடலில் பெரும்பாலும் டால்பினை காண முடியும். மற்ற தீவு பகுதிகளில் இருந்தாலும் டால்பின்களை பார்ப்பது அரிது தான். டால்பின் பாலூட்டி உயிரினமாகும். மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 7 வகையான டால்பின்கள் உள்ளன. இதில் கூனல் முதுகு டால்பினை பெரும்பாலும் காணலாம். கடல் வளம் சிறப்பாக இருந்தால் மட்டுமே அந்த கடலில் டால்பின்கள் அதிகமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story