தொடர் கனமழை காரணமாக சிக்கமகளூரு மாவட்டத்தில் மண்சரிவு குடகில், பிரம்மகிரி மலையில் பிளவு


தொடர் கனமழை காரணமாக சிக்கமகளூரு மாவட்டத்தில் மண்சரிவு குடகில், பிரம்மகிரி மலையில் பிளவு
x
தினத்தந்தி 9 Sept 2019 3:08 AM IST (Updated: 9 Sept 2019 3:08 AM IST)
t-max-icont-min-icon

தொடர் கனமழை காரணமாக சிக்கமகளூரு மாவட்டத்தில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் குடகு மாவட்டத்தில் பிரம்மகிரி மலையில் பெரிய அளவில் பிளவு ஏற்பட்டு இருக்கிறது.

சிக்கமகளூரு,

சிக்கமகளூரு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. ஏற்கனவே கடந்த மாதம் பெய்த தொடர் கனமழையின் காரணமாக மாவட்டத்தில் ஏராளமான இடங்கள் வெள்ளக்காடாக மாறின. இந்த நிலையில் மீண்டும் சிக்கமகளூரு மாவட்டத்தில் தொடர் கனமழை கொட்டி வருகிறது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக மலைப்பகுதிகளான மூடிகெரே தாலுகாவிற்கு உட்பட்ட தாரதஹள்ளி, பைராபுரா, பனகல், கொட்டிகேஹாரா, ஜாவலி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழையின் காரணமாக பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் தாரானாத் என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர் காபித்தோட்டம் முற்றிலும் மண்சரிவால் நாசமாகி விட்டது.

மேலும் என்.ஆர்.புரா, சிருங்கேரி, கொப்பா, சிக்கமகளூரு தாலுகா பகுதிகளில் ஓடும் கால்வாய்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் துங்கா, பத்ரா, ஹேமாவதி ஆகிய ஆறுகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் குதிரேமொக்கா, கலசா, சிம்ஷா, பாலேஹொன்னூர் பகுதியில் உள்ள தரைப்பாலங்கள் மூழ்கி உள்ளன. இதன்காரணமாக பல கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஹெப்பாலேவில் உள்ள ஆற்றுப்பாலத்தை மூழ்கடிக்கும் அளவிற்கு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

தொடர்ந்து சிக்கமகளூரு மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் காவிரியின் பிறப்பிடமாகவும், மலைநாடுகளில் ஒன்றாகவும் விளங்கும் குடகு மாவட்டத்திலும் தென்மேற்கு பருவமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக தலைக்காவிரி பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் தலைக்காவிரியில் அமைந்துள்ள பிரம்மகிரி மலைப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை காரணமாக கடந்த 15 நாட்களாக சிறிய, சிறிய அளவில் மலைகளில் பிளவுகள் ஏற்பட்டு வந்தன.

இந்த நிலையில் நேற்று காலையில் பெரிய அளவில் மலைப்பகுதியில் பிளவு ஏற்பட்டது. புனித தலமாக கருதப்படும் பிரம்மகிரி மலைப்பகுதியில் பெரிய அளவில் பிளவு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு பிரம்மகிரி மலைப்பகுதியில் மேற்கொண்டு பிளவுகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் மலைப்பகுதியில் சட்டவிரோதமாக ஓட்டல்கள், விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை உடனடியாக அங்கிருந்து அகற்ற வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

பிரம்மகிரி மலைப்பகுதியில் மண்சரிவும், பிளவுகளும் ஏற்பட்டுள்ளதாலும், தொடர்ந்து அப்பகுதியில் மழை பெய்து வருவதாலும் அங்கு செல்வதற்கு பக்தர்கள் தயங்குகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள்.

Next Story