மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பி வைப்பு: இலவச அரிசி திட்டத்தை ஏற்கவில்லை என கூறுவது தவறு - கவர்னர் கிரண்பெடி விளக்கம்


மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பி வைப்பு: இலவச அரிசி திட்டத்தை ஏற்கவில்லை என கூறுவது தவறு - கவர்னர் கிரண்பெடி விளக்கம்
x
தினத்தந்தி 9 Sep 2019 12:00 AM GMT (Updated: 8 Sep 2019 11:49 PM GMT)

இலவச அரிசி திட்டத்தை ஏற்கவில்லை என கூறுவது தவறு; மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று கவர்னர் கிரண்பெடி விளக்கம் அளித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் குடிமை பொருள் வழங்கல் துறையின் மூலம் சிவப்பு நிற ரேஷன் கார்டுகளுக்கு 20 கிலோ இலவச அரிசியும், மஞ்சள் நிற ரேஷன் கார்டுகளுக்கு 10 கிலோ இலவச அரிசியும் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அரிசிக்கு பதிலாக பணமாக பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார். இதனால் இலவச அரிசி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த முடியாமல் போனது.

இந்த நிலையில் தற்போது நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில், பணத்திற்கு பதிலாக அரிசி வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நேற்று முன்தினம் மதியம் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் கிரண்பெடியை சந்தித்து பேசினர். அப்போது சட்டசபை தீர்மானத்தின் நகலை கொடுத்தனர்.

மேலும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். அதனை ஏற்க கவர்னர் கிரண்பெடி மறுத்து விட் டார். இதனை தொடர்ந்து அங்கிருந்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர். இதுதொடர்பாக மத்திய அரசிடம் முறையிடவும், நீதிமன்றத்தை நாடவும் முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தேர்வு செய்யப்பட்ட அரசின் பிரதிநிதிகள் என்னை அலுவலகத்தில் வந்து சந்தித்தனர். அப்போது ஏற்கனவே பின்பற்றிய நடைமுறைப்படி இலவச அரிசி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அரசே டெண்டர் மூலம் பல்வேறு ஒப்பந்ததாரர்களிடம் அரிசியை கொள்முதல் செய்து வினியோகம் செய்ய விரும்புவதாக தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் மோசடி நடப்பதாக வந்த புகாரை தொடர்ந்து அதனை தடுக்கும் வகையில் பணத்தை நேரடியாக பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. பொதுமக்களுக்கு உரியகாலத்தில் பணம் சென்று சேருவதோடு, அளவு மற்றும் விலைக்கு ஏற்றவாறு பொதுமக்களே தரமான அரிசியை வாங்கி கொள்வார்கள் என்று கவர்னர் மாளிகை கருதுகிறது.

இந்த விவகாரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இது தொடர்பான கோப்பை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம். இறுதி முடிவு வரும் வரை தற்போது உள்ள நிலையே அரிசிக்கு பதிலாக பணம் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்று கூறினேன். இலவச அரிசி வழங்க செலவிடப்படும் ரூ.160 கோடியை புதுச்சேரி சந்தையில் செலவிடப்பட வேண்டும். இது மாநிலத்தில் உள்ள வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக அமையும். இந்த திட்டத்தை ஏற்கவில்லை என கூறுவது தவறானது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story