பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 10 Sept 2019 4:00 AM IST (Updated: 9 Sept 2019 10:50 PM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டியில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில், தொழிலாளர்களின் அடிப்படை கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி ஊட்டி மத்திய பஸ் நிலையம் முன்பு தர்ணா போராட்டம் நேற்று நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரமேஸ், துணைத்தலைவர் ஆல்தொரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தை மாநில செயலாளர் கோபிகுமார் தொடங்கி வைத்து பேசினார். பின்னர் நிர்வாகிகள் ரபீக், அடையாள குட்டன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

போராட்டத்தில் மத்திய அரசு தொழிலாளர் நல சட்டங்களை தன்னிச்சையாக மாற்றுவதை கைவிட வேண்டும். தோட்ட தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தினக்கூலியாக ரூ.600 வழங்க வேண்டும். கட்டிடம் மற்றும் முறைசாரா தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நலவாரிய பணப்பயன்களை காலதாமதமின்றி உடனுக்குடன் வழங்க வேண்டும். குன்னூர் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையை கார்ப்பரேசனாக மாற்றும் முடிவை கைவிட வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள் பணிகளை முறைப்படுத்த வேண்டும்.

டாஸ்மாக், தேயிலை தோட்டங்களில் பல ஆண்டுகளாக பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

நீலகிரி மலை ரெயிலை தனியார்மயமாக்குவதை கைவிட வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தொழிலாளர்களுக்கு முழுமையாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குன்னூர் வெலிங்டன் கோதுமை ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் தேயிலை எஸ்டேட் பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் நில அளவீடு செய்து, ஆக்கிரமிப்பு செய்து உள்ள நிலத்தை கையகப்படுத்தி தோட்ட தொழிலாளர்களுக்கு வீடு கட்ட தலா 2 சென்ட் நிலம் வழங்க வேண்டும்.

இன்கோ தேயிலை தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பணி ஓய்வு பெறும் வரை ஒரே பணியை வழங்காமல் பணிமூப்பு அடிப்படையில் பணிகள் வழங்க வேண்டும். நீலகிரியில் பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.30 விலை கிடைக்கவும், இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவும் சாமிநாதன் குழு அறிக்கையை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.

நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள பர்லியாரில் பசுமை வரி வசூலிப்பதால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு கல்லார் அல்லது டபுள் ரோட்டில் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Next Story