கோவையில் பரபரப்பு, பச்சிளம் குழந்தையின் உடலில் 20 நாட்களாக சிக்கி இருந்த ஊசி
பச்சிளம் குழந்தையின் உடலில் 20 நாட்களாக சிக்கி இருந்த ஊசி குளிக்க வைக்கும் போது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் எம்.எஸ்.ஆர்.புரத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 28). இவர் சொந்தமாக செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி மலர்விழி (20). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் மீண்டும் கர்ப்பமடைந்த மலர்விழி பிரசவத்துக்காக கடந்த மாதம் 19-ந் தேதி மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் 20-ந் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து அங்கு தாயும், சேயும் சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் கடந்த 21-ந் தேதி மாலை 6 மணியளவில் அந்த ஆண் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காக இடது கை மற்றும் இடது தொடையில் தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் கடந்த 31-ந் தேதி மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை முடிந்து மலர்விழி வீடு திரும்பினார்.
வீட்டிற்கு சென்ற நாளில் இருந்து பச்சிளம் குழந்தை தொடா்ந்து அழுது கொண்டே இருந்தது. குழந்தை அழுவதற்கான காரணம் தெரியாமல் தாய் மலர்விழி பரிதவித்தார். இதற்கிடையே கடந்த 21-ந் தேதி குழந்தைக்கு தடுப்பூசி போட்ட இடது தொடையில் லேசான வீக்கம் இருந்தது. நாளடைவில் வீக்கம் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகிக்கொண்டே வந்தது. குழந்தையும் தொடர்ந்து இடைவிடாது அழுது கொண்டே இருந்தது.
நேற்று காலை மலர்விழியின் தாய் தேன்மொழி அந்த குழந்தையை குளிப்பாட்டினார். அப்போது இடது தொடையை தேய்க்கும் போது தேன்மொழியின் கையில் சுருக்கென்று ஏதோ குத்தியது. குத்திய இடத்தில் இருந்து ரத்தம் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தேன்மொழி குழந்தையின் இடது தொடையை தொட்டுப்பார்த்தார். அப்போது அதில் ஒரு ஊசியின் கூர்முனை வெளியே தெரிந்தது. பின்னர் இதுகுறித்து அவா் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தார்.
குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டபோது சிரஞ்சியில் இருந்து ஊசி உடைந்து தொடைக்குள் சிக்கி இருந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து அவா்கள் குழந்தையின் தொடையில் சிக்கியிருந்த ஊசியை அகற்றினார்கள். அப்போது வலி தாங்க முடியாமல் குழந்தை அழுதது.இதையடுத்து குழந்தையின் பெற்றோா் மற்றும் உறவினர்கள் அந்த குழந்தையை எடுத்துக்கொண்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு தலைமை மருத்துவ அலுவலர் (பொறுப்பு) இளஞ்செழியனிடம் நடந்த சம்பவம் குறித்து எடுத்துக்கூறி இடது தொடையில் சிக்கிய ஊசியையும் காட்டினார்கள்.
அத்துடன் அவாிடம் புகார் மனு ஒன்று அளித்தனர். அதில் எங்களது குழந்தையின் உடலில் இருந்த ஊசியால் குழந்தையின் உடல் நிலை மோசமாக உள்ளது. எனவே குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும் இதில் சம்பந்தப்பட்ட நர்சு மற்றும் பணியில் இருந்த டாக்டா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இருந்தது.
இதுகுறித்து தலைமை மருத்துவ அலுவலர் இளஞ்செழியன் கூறும்போது, பச்சிளம் குழந்தைக்கு போடப்பட்ட ஊசியானது தொடையில் சிக்கியது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதில் உண்மை தன்மை இருப்பின் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பச்சிளம் குழந்தையின் உடலில் 20 நாட்களாக ஊசி சிக்கி இருந்த சம்பவம் கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story