தி.மு.க. இளைஞர் அணியில் 30 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க திட்டம் - திருவாரூரில், உதயநிதி ஸ்டாலின் பேட்டி
தி.மு.க. இளைஞர் அணியில் 30 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்கான முகாம் வருகிற 14-ந் தேதி நடைபெற உள்ளதாகவும் திருவாரூரில், உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
திருவாரூர்,
திருவாரூர் அருகே கூடூர் ஊராட்சி நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள திருவாசல் குளத்தை தி.மு.க. இளைஞர் அணி சார்பில் தூர்வார முடிவு செய்யப்பட்டது. அதன்படி தூர்வாரும் பணிகளை தொடங்கி வைப்பதற்காக தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு திருவாரூர் வந்தார். அப்போது அவருக்கு தி.மு.க. இளைஞர் அணியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள அவருடைய வீட்டில் இரவு தங்கினார். பின்னர் நேற்று காலை 8 மணி அளவில் திருவாரூரில் இருந்து புறப்பட்டு நாரணமங்கலம் சென்ற உதயநிதி ஸ்டாலின், குளம் தூர்வாரும் பணிகளை பொக்லின் எந்திரத்தை இயக்கி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளை தூர்வாரி சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்குவது என இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மறைந்த தலைவர் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் குளம் தூர்வாரும் பணியை தொடங்குவதாக இருந்தது. அதற்கு முன்னதாக மதுரையில் கண்மாய் தூர்வாரும் பணி தொடங்கி வைக்கப் பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் எங்களால் முடிந்த அளவுக்கு குளங்களை தூர்வார திட்டமிட்டுள்ளோம். சேலம், நெல்லை ஆகிய மாவட்டங்களில் இளைஞர் அணி நிர்வாகிகள் நேர்காணல் கூட்டம் நடத்தப்பட்டதே தவிர நிர்வாகிகளை மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தி.மு.க. இளைஞர் அணியில் 30 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க திட்ட மிடப்பட்டுள்ளது. அதற்கான உறுப்பினர் சேர்க்கை முகாம் வருகிற 14-ந் தேதி நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது எம்.எல்.ஏ.க்கள் பூண்டி கலைவாணன், டி.ஆர்.பி. ராஜா, ஆடலரசன், முன்னாள் எம்.பி. விஜயன், ஒன்றிய செயலாளர் தேவா, நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இளையராஜா, துணை அமைப்பாளர் ரஜினி சின்னா, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் எழிலரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து நாகை மாவட்டம் திருக்குவளைக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின், அங்கு இளைஞர் அணி சார்பில் தூர்வாரி சீரமைக்கப்பட்ட குளத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கினார். பின்னர் அங்கிருந்து சென்னை புறப்பட்டு சென்றார்.
Related Tags :
Next Story