மாவட்ட செய்திகள்

திருவாடானை யூனியனில் குடிமராமத்து பணிகள் - கருணாஸ் எம்.எல்.ஏ. ஆய்வு + "||" + In the Union of Travancore Citizenship Works - Karunas MLA Review

திருவாடானை யூனியனில் குடிமராமத்து பணிகள் - கருணாஸ் எம்.எல்.ஏ. ஆய்வு

திருவாடானை யூனியனில் குடிமராமத்து பணிகள் - கருணாஸ் எம்.எல்.ஏ. ஆய்வு
திருவாடானை யூனியனில் நடைபெறும் குடி மராமத்து திட்டப்பணிகளை கருணாஸ் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
தொண்டி, 

திருவாடானை யூனியனில் முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் வட்டாணம், குருமிலாங்குடி, நாவலூர், பனஞ்சாயல், ஆதியூர், கோவணி உள்பட பல்வேறு கிராமங்களில் கண்மாய்கள் மராமத்து பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை திருவாடானை எம்.எல்.ஏ. கருணாஸ் அதிகாரிகளுடன் சென்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது கண்மாய் பாசன விவசாயிகளை சந்தித்து பேசிய அவர், பணிகளை விரைந்து முடிக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக அனைத்து பணிகளையும் நிறைவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவாடானை தொகுதியில் சுமார் 25-க்கும் மேற்பட்ட பொதுப்பணித்துறை கண்மாய்கள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டு வருகிறது. இப்பணிகளை விரைவில் முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கலெக்டரின் வேண்டுகோளை ஏற்று இந்த பணிகள் முடிந்தவுடன் திருவாடானை தொகுதி முழுவதும் உள்ள கண்மாய்களில் சுமார் ஒரு கோடி பனை விதைகள் நடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். பாசன சங்கங்கள் மூலம் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும். இதுதவிர ஆலமரம், அரசமரம், அத்திமரம் போன்ற பல்வேறு வகையான மரங்கள் நடுவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் பனஞ்சாயல் கண்மாயை பார்வையிடுவதற்காக கருணாஸ் எம்.எல்.ஏ. சென்றபோது அவரிடம் கண்மாய் பாசன சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் ஆதியூர் கண்மாய்க்கரை, சாலையோரத்தில் அமைந்திருப்பதால் மழைக்காலங்களில் மண் சரிந்து சாலைக்கு பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும், சட்டமன்ற உறுப்பினர் நிதியின் மூலம் தடுப்புச்சுவர் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் நிதியின் மூலம் ஆதியூர் கிராமத்தில் கண்மாய் கரை தடுப்புச்சுவர் கட்டித்தரப்படும் என்று கருணாஸ் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

அவருடன் திருவாடனை தாசில்தார் சேகர், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் செங்கைராஜன், முக்குலத்தோர் புலிப்படை மாநில பொருளாளர் முத்துராமலிங்கம், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் முத் தமிழரசன், மகேந்திர பாண்டியன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் சரவணன், ஆதியூர் மகாலிங்கம், ஒன்றிய மாணவரணி செயலாளர் சண்முகநாதன், இளைஞர் பாசறை செயலாளர் வக்கீல் ராம்குமார் உள்பட பலர் சென்றனர்.