எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு: சேலம் கலெக்டரிடம் விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம்


எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு: சேலம் கலெக்டரிடம் விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 10 Sept 2019 4:15 AM IST (Updated: 10 Sept 2019 12:17 AM IST)
t-max-icont-min-icon

விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் கலெக்டரிடம் விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்,

கோவை மாவட்டம் இருகூரில் இருந்து பெங்களூரு தேவணகொந்தி வரை பெட்ரோலிய நிறுவனம் சார்பில் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இது விளைநிலங்கள் வழியாக செல்லக்கூடிய திட்டம் என்பதால் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக கொண்டு செல்ல வலியுறுத்தி, இத்திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் கூட்டமைப்பினர் நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி இணை செயலாளர் காவேரி உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் நெடுஞ்சாலை ஓரமாக பெட்ரோலிய எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இருந்த கலெக்டர் ராமனை விவசாய சங்க நிர்வாகிகள் சந்தித்து இந்த திட்டத்தை கண்டித்தும், விளைநிலங்கள் பாதிக்காத வகையில் நெடுஞ்சாலை ஓரமாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் மனு அளித்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ரவீந்திரன் கூறுகையில், விவசாய நிலங்கள் வழியாக பெட்ரோலிய எண்ணெய் குழாய் பதிக்கப்பட்டால் பல்வேறு துயரங்களை விவசாயிகள் சந்திக்க வேண்டியதுவரும். குறிப்பாக எங்களின் விவசாய நிலம், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும். விவசாயம், மரப்பயிர்கள் பயிரிட முடியாததுடன், வீடு கட்டவும் முடியாது. எனவே, விவசாயிகளை பாதிக்காத வகையில் இத்திட்டத்தை நெடுஞ்சாலை ஓரமாக செயல்படுத்த வேண்டும். மீறும் பட்சத்தில் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றார்.


Next Story