திருவண்ணாமலையில் அருணகிரிநாதருக்கு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா-அமைச்சர் பங்கேற்பு


திருவண்ணாமலையில் அருணகிரிநாதருக்கு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா-அமைச்சர் பங்கேற்பு
x
தினத்தந்தி 9 Sep 2019 11:00 PM GMT (Updated: 9 Sep 2019 6:48 PM GMT)

திருவண்ணாமலையில் அருணகிரிநாதருக்கு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் அவதரித்த அருணகிரிநாதருக்கு மணிமண்டபம் கட்ட கோவில் இடம் ஒன்றினை அளிக்கக்கோரி அருணகிரிநாதர் மணிமண்டப அறக்கட்டளை என்ற அமைப்பினர் விண்ணப்பித்து இருந்தனர்.

இதையடுத்து திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஆணாய்பிறந்தான் கிராமத்தில் நுகர்பொருள் வாணிப கழகத்தின் அருகில் உள்ள இடத்தில் அருணகிரிநாதருக்கு மணி மண்டபம் கட்டுவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டது.

இந்த இடத்தில் ரூ.87½ லட்சம் மதிப்பில் 3 ஆயிரம் சதுர அடியில் அருணகிரிநாதர் மணிமண்டப அறக்கட்டளை அமைப்பினரால் உபயமாக மணிமண்டபம் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.

மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. அறக்கட்டளை தலைவர் சின்ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் அமரேசன், பொருளாளர் தனுஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், திருவண்ணாமலை மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அ.தி.மு.க. நகர செயலாளர் செல்வம் உள்பட அ.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து எ.வ.வேலு எம்.எல்.ஏ. தலைமையில் சி.என். அண்ணாதுரை எம்.பி., மாவட்ட துணை செயலாளர் சுந்தரேசன், நகர செயலாளர் காத்திவேல்மாறன் மற்றும் தி.மு.க.வினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினர். இதில் அறக்கட்டளை உறுப்பினர்கள் ஆகாஷ் முத்துகிருஷ்ணன், தேவராஜ், ராமசாமி, முன்னாள் ஐகோர்ட்டு நீதிபதி முருகபூபதி, ராமச்சந்திர உபாத்தியாயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story