பெரணமல்லூரை தனி தாலுகாவாக உருவாக்க குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டரிடம், பொதுமக்கள் மனு


பெரணமல்லூரை தனி தாலுகாவாக உருவாக்க குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டரிடம், பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 9 Sep 2019 11:15 PM GMT (Updated: 9 Sep 2019 6:48 PM GMT)

பெரணமல்லூரை தனி தாலுகாவாக உருவாக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டர் கந்தசாமியிடம், பொதுமக்கள் மனு அளித்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்களிடமும், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளிடமும் மனுக்கள் பெற்றபட்டது.

இதில் வீட்டு மனைப்பட்டா, கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உபகரணங்கள், ரேஷன் கார்டு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டார். பின்னர் அவர் அந்த மனுக்களை சம்பந்தபட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும் நிலுவையில் உள்ள மனுக்கள் மீதான விசாரணை குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் செல்வராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராமசாமி ஆகியோர் தலைமையில் பெரணமல்லூர் பேரூராட்சி மற்றும் அதன சுற்றியுள்ள கிராம மக்கள், அனைத்து இயக்கங்கள், அனைத்து கட்சிகள் சார்பில் கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘வந்தவாசி தாலுகா மாவட்டத்திலேயே மிகப்பெரிய தாலுகாவாக உள்ளது. இவற்றில் 8 குறு வட்டங்கள், 161 வருவாய் கிராமங்கள் உள்ளன. இந்த வட்டத்தில் உள்ள பெரணமல்லூர் ஒன்றியத்தில் 1½ லட்சம் மக்கள் உள்ளனர். பெரணமல்லூருக்கும், வந்தவாசிக்கும் 25 கிலோ மீட்டர் தூரம் உள்ளதால் பொதுமக்கள் அலுவலக பணிக்காக வந்தவாசிக்கு சென்று திரும்ப இயலாமல் அவதிப்படுகிறார்கள்.

பெரணமல்லூர் 2011 வரை சட்டமன்ற தொகுதியாக இருந்தது. பெரணமல்லூரில் மத்திய, மாநில அரசுகளின் பல துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. வந்தவாசி தாலுகாவை பிரித்து பெரணமல்லூரை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகாவாக உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை காமராஜர் நகர், ராம்ஜி நகர், பல்லவன் நகர் ஆகிய பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில், இந்த பகுதியில் காலம் காலமாக வாழும் அருந்ததியர் இன மக்கள் நாவக்கரையில் உள்ள அருந்ததியர் இடுகாட்டை பயன்படுத்தி வருகிறோம். இந்த இடத்தில் குடிசை, மாடி வீடுகள் கட்டி ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். தற்போது நாவக்கரை பகுதியை சேர்ந்த சிலர் கோவில் கட்ட முன்னேற்பாடு செய்து வருகின்றனர். எனவே, இதுகுறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுத்து இடுகாட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மனோகரன் தலைமையில் தரடாப்பட்டு கிராம மக்கள் அளித்துள்ள மனுவில், கடந்த 4-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை தொடர்ச்சியாக 5 நாட்கள் தரடாப்பட்டு கிராமத்தில் பெரிய ஏரியில் உள்ள செம்மண் செங்கல் சூளை மற்றும் விவசாய நிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனை தடுக்க வேண்டிய தரடாப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் ஜெயந்தி, கிராம உதவியாளர் செல்வி ஆகியோர் கலெக்டரின் அனுமதி பெற்று தான் ஏரியில் இருந்து செம்மண் எடுக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

இதை தடுக்க வேண்டிய தரடாப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story