‘உதவித்தொகை கிடைக்காமல் 3 ஆண்டுகளாக தவிக்கிறோம்’ குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் கல்லூரி மாணவிகள் மனு


‘உதவித்தொகை கிடைக்காமல் 3 ஆண்டுகளாக தவிக்கிறோம்’ குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் கல்லூரி மாணவிகள் மனு
x
தினத்தந்தி 9 Sep 2019 9:30 PM GMT (Updated: 9 Sep 2019 7:42 PM GMT)

‘உதவித்தொகை கிடைக்காமல் 3 ஆண்டுகளாக தவிக்கிறோம் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் அரசு கல்லூரி மாணவிகள் மனு அளித்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து கடந்த முறை நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார். பின்னர், கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது. அப்போது நிலக்கோட்டையை சேர்ந்த 6 மாணவிகள் கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் நிலக்கோட்டையில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வருகிறோம். எங்கள் கல்லூரியில் படிக்கும், குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகையாக அரசு வழங்குகிறது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக, எங்களுடன் சேர்த்து 15 பேருக்கு இந்த உதவித்தொகை கிடைக்கவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் கடந்த 3 ஆண்டுகளாக நாங்கள் உதவித்தொகை கிடைக்காமல் தவித்து வருகிறோம். மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்ற கலெக்டர், உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அவர்களை தொடர்ந்து ஆத்தூர் தாலுகா அம்பாத்துறையை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், திண்டுக்கல்-மதுரை ரெயில் பாதையில் அமலிநகர் அருகே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.

எனவே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். இந்த மனுவுடன் சேர்த்து நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மொதம் 530 மனுக்கள் கலெக்டரிடம் அளிக்கப்பட்டது. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். 

Next Story