திருப்பூரில் பரபரப்பு சம்பவம்: தியேட்டர்முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு - மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் கைவரிசை
திருப்பூரில் தியேட்டர் முன்பு மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் பெட்ரோல் குண்டு வீசினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் மண்ணரையில் ரேவதி தியேட்டர் உள்ளது. இந்த தியேட்டருக்கு நேற்று முன்தினம் இரவு காட்சிக்கு 30 வயது மதிக்கத்தக்க வாலிபர்கள் 2 பேர் குடிபோதையில் டிக்கெட் எடுக்க சென்றுள்ளனர். அப்போது தியேட்டரில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனையாகி உள்ளது. .
இதன் காரணமாக டிக்கெட் கவுண்ட்டரில் உள்ளவர்கள் டிக்கெட் இல்லை என தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் அங்குள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டு விட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் இரவு படம் முடிவடைந்து அனைவரும் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தியேட்டர் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தினர். தொடர்ந்து ஒருவர் கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டை தியேட்டர் மீது வீசினார். அப்போது அந்த குண்டு தியேட்டர் மீது விழாமல் தியேட்டர் முன்பு விழுந்து தீப்பிடித்தது. இதற்கிடையில் பெட்ரோல் குண்டை வீசிய ஆசாமிக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் கூச்சலிட்டனர்.
இதையடுத்து அந்த 2 ஆசாமிகளும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்து வந்தனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்து வருகிறார்கள். அப்போது பெட்ரோல் குண்டு வீசிய ஆசாமிகளின் உருவமும், அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணும் தெளிவாக கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சினிமா டிக்கெட் கிடைக்காத விரக்தியில் தகராறில் ஈடுபட்டவர்கள் பெட்ரோல் குண்டு வீச முயன்றனரா? அல்லது வேறு யாரேனும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்களா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story