திருப்பூரில் பயங்கரம்: கத்தியால் குத்தி பெண் கொலை - செலவுக்கு பணம் கொடுக்காததால் மகன் வெறிச்செயல்
திருப்பூரில் செலவுக்கு பணம் கொடுக்காததால் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த மகனை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நல்லூர்,
திருப்பூர் காசிப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள மணியக்காரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவருடைய மனைவி ஆரோக்கியமேரி (வயது 45). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு அர்ஜீத் (22) என்ற மகனும் உள்ளனர். இவர்களில் ஒரு மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். மற்றொரு மகள் கோவையில் தங்கி அங்குள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
ஆரோக்கிய மேரியின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து வி்ட்டதால், ஆரோக்கியமேரி தனது, மகனுடன் மணியக்காரன்பாளையம் பகுதியில் உள்ள வீட்டில் 2-வது தளத்தில் குடியிருந்து வந்தார். அர்ஜீத் வேலைக்கு போகாததால் செலவுக்காக அவ்வப்போது தாயாரிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மதியம் வழக்கம் போல் அர்ஜீத் தனது தாயாரிடம், செலவுக்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது ஆரோக்கிய மேரி பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அர்ஜீத், வீ்ட்டில் இருந்த கத்தியை எடுத்து தாயை குத்தி விடுவதாக மிரட்டி பணம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆரோக்கியமேரி, இது குறித்து கோவையில் உள்ள தனது மகளை செல்போனில் தொடர்பு கொண்டு “பணம் கேட்டு அர்ஜீத் கத்தியை எடுத்து குத்த வருவதாக தெரிவித்து விட்டு”, பக்கத்து அறைக்கு சென்று கதவை சாத்திக்கொண்டார்.
இதற்கிடையில் பணம் கேட்ட விவரத்தை கோவையில் உள்ள சகோதரியிடம் தெரிவித்ததால் கோபமடைந்த அர்ஜீத், கதவை தள்ளிக்கொண்டு சென்று அங்கு இருந்த ஆரோக்கியமேரியை கத்தியால் குத்தினார். இதனால் வலிதாங்க முடியாத ஆரோக்கிய மேரி அலறியுள்ளார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் வீட்டிற்குள் ரத்த வெள்ளத்தில் ஆரோக்கியமேரி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையில் ஆரோக்கியமேரியின் உறவினர்கள் அங்கு வந்ததும் அங்குள்ள மற்றொரு அறையில் இருந்த அர்ஜீத், “ என் பக்கம் யாராவது வந்தால் மாடியில் இருந்து குதித்து விடுவேன் ” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில் இந்த கொலை சம்பவம் குறித்து திருப்பூர் ஊரக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து சென்று ஆரோக்கிய மேரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அர்ஜீத்தை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அதை தொடர்ந்து அர்ஜீத் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அவரிடம் தொடர்ந்நுது விசாரித்து வருகிறார்கள். செலவுக்கு பணம் கொடுக்காத தாயாரை, மகனே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story