குமரி வனப்பகுதியை சரணாலயமாக மாற்றுவது குறித்து மக்களிடம் நேரடியாக கருத்து கேட்க, குறைதீர்க்கும் முகாமில் கலெக்டரிடம் மனு


குமரி வனப்பகுதியை சரணாலயமாக மாற்றுவது குறித்து மக்களிடம் நேரடியாக கருத்து கேட்க, குறைதீர்க்கும் முகாமில் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 10 Sept 2019 4:45 AM IST (Updated: 10 Sept 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

குமரி வனப்பகுதியை சரணாலயமாக மாற்றுவது குறித்து மக்களிடம் நேரடியாக சென்று கருத்து கேட்க வேண்டும் என்று குறைதீர்க்கும் முகாமில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். அந்த வகையில் 471 மனுக்களை கலெக்டர் பிரசாந்த் வடநேரே பெற்றுக்கொண்டார்.

அப்போது மனித பாதுகாப்பு கழக நிறுவனர் ஜெய்மோகன் தலைமையில் நல்லூர் கிராம மக்கள் கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், “விளவங்கோடு தாலுகா நல்லூர் கிராமத்தில் தொடுவெட்டி பகிர்மான கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் பாசன பயன்பாடு இல்லாமல் பல ஆண்டுகளாக பாழடைந்து காணப்படுகிறது. கால்வாயின் கரையோரத்தில் சுமார் 45 ஆண்டுகளாக சிலர் வசித்து வருகின்றனர். வீட்டு வரியும் செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மார்க்கெட் ரோடு பகுதியில் உள்ள சில வீடுகளை 21 நாட்களுக்குள் காலிசெய்ய வேண்டும் என்று குழித்துறை பட்டணங்கால்வாய் பிரிவு உதவி பொறியாளரிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. வீடுகளை காலி செய்தால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட மக்களுக்கு வேறு எங்கும் சொந்தமாக இடம் கிடையாது. எனவே அரசு மாற்று இடம் வழங்க வேண்டும். அதுவரையிலும் மக்கள் அதே வீடுகளில் வசிக்க அனுமதிக்க வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

இதே போல மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு (ரெட் ஸ்டார்) மாவட்ட செயலாளர் பால்ராஜ் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில், “தமிழகத்தில் மாணவர்கள் கல்விக்கடனாக சுமார் ரூ.17 ஆயிரம் கோடி பெற்றுள்ளனர்.

கல்வி கடனை வசூலிக்க தனியார் நிறுவனத்துக்கு மத்திய நிதி அமைச்சகம் வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும். கல்வி கடன் பெற்றவர்களுக்கு வேலை கிடைக்கும் வரை கடனை வசூலிக்க கூடாது“ என்று கூறப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் முன்னேற்ற இயக்க நிறுவன தலைவர் ஜாண் விக்டர் தாஸ் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில், “குமரி மாவட்டத்தின் வனப்பகுதிகள் கன்னியாகுமரி வன உயிரின சரணாலயமாக அறிவிக்கை செய்யப்பட்டு உள்ளன. சரணாலயத்தை சுற்றிலும் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தேச எல்கையாக 17 கிராமங்கள் வரையறை செய்யப்பட்டு உள்ளன. இந்த கிராமங்கள் மற்றும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகள் அனைத்தும் வனத்துறை கட்டுப்பாட்டுக்குள் வருவதினால் பழங்குடியின மக்கள் வனப்பகுதிக்குள் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றும் சூழ்நிலை உருவாகும். எனவே சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் குறித்து மக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் வருகிற 12-ந் தேதி அவசரகதியில் நடத்தாமல், மக்களிடம் நேரில் சென்று கருத்துகேட்க வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

பச்சை தமிழகம் கட்சியின் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் அளித்த மனுவில், “பூதப்பாண்டி அருகே காரியாங்கோணம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக கற்களை எடுத்துள்ளனர். மலையை உடைத்து பாறைகளை கடத்தி செல்கிறார்கள். இதனால் இயற்கை வளம் பாதிக்கப்பட்டு இருப்பதோடு நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சட்ட விரோதமாக கனிம வளங்களை கொள்ளையடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருக்கிறது.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு (விடுதலை) கட்சியின் மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில், “குமரி மாவட்டத்தில் 4,400 குளங்கள் உள்ளன. அதில் 2,700 குளங்கள் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. மீதமுள்ள குளங்கள் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் கட்டுப்பாட்டில் வருகின்றன. ஆனால் 200 குளங்கள் நிலவியல் பட்டா என்கிற வகையில் நீர் நிலைகளாக தனியாரிடம் உள்ளது. எனவே அனைத்து குளங்களையும் மீட்க வேண்டும். மேலும் 4,400 குளங்களையும் பாதுகாக்க வேண்டும். கன்னியாகுமரி பேரூராட்சியில் தகுதியான ஒப்பந்தகாரர்களை வைத்து வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், கடந்த 21-6-2019 அன்று மின்சாரம் தாக்கி பலியான வில்பிரட் என்பவரின் மனைவி விஜயஷாலினி என்பவருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சத்துக்கான காசோலையை கலெக்டர் பிரசாந்த் வடநேரே வழங்கினார். மேலும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டபோது இறந்த 2 மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.2 லட்சத்துக்கான காசோலையை சம்பந்தப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அபுல்காசிம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story