வீட்டுமனைப்பட்டா- குடிநீர் கேட்டு கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
இலவச வீட்டுமனைப்பட்டா, குடிநீர் கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
நெல்லை கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.
பாளையங்கோட்டை அருகே உள்ள சிவந்திபட்டி பற்பநாதபுரம் கிராம மக்கள் முதியோர் உதவித்தொகை கேட்டு மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கவேண்டும் என்று கோஷங்கள் போட்டனர். உடனே அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் முதியோர் உதவித்தொகை கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
அம்பை அருகே உள்ள வடமலைசமுத்திரம் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். தாங்கள் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் வீடுகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கவேண்டும் என்று கூறி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். நாரணம்மாள்புரம் பகுதி மக்கள் கொடுத்த மனுவில், தங்கள் ஊருக்கு தனியாக ரேஷன்கடை அமைத்து தரவேண்டும் என்று கூறியுள்ளனர்.
நெல்லை அருகே உள்ள பாலாமடை பஞ்சாயத்து பால்கணபதியாபுரம் கிராமத்தை சேர்ந்த பெண்கள், குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி காலிகுடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
நெல்லை மாநகர பகுதியில் தெரு ஓரத்தில் சுகாதாரம் இல்லாமல் பாணிபூரி விற்பனை செய்வதை தடுக்கவும், அந்த உணவின் தரத்தை ஆய்வு செய்யவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
கண்டியபேரி விவசாயிகள் சங்கத்தினர் கொடுத்த மனுவில், குளங்களின் மடைகளில் உள்ள ஷட்டர்களை சீர் செய்து தரவேண்டும். ஷட்டர் இல்லாத மடைகளில் உடனே ஷட்டர் பொருத்தவேண்டும். மடை முன் உள்ள மண்ணை அப்புறப்படுத்தவேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
கடையநல்லூர் தாலுகா கொடிக்குறிச்சி பஞ்சாயத்து சிவராமபேட்டை கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று திரண்டு வந்து மனு கொடுத்தனர்.
அதில், எங்கள் ஊரில் உள்ள பஞ்சாயத்துக்கு சொந்தமான கிணற்றை தனிநபர் ஒருவர் மூடி கட்டிடம் கட்டி வருகிறார். இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஆக்கிரமிப்பை அகற்றி மூடப்பட்ட கிணற்றை தோண்டி தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்கவேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
கூட்டத்தில் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 3 பேருக்கு ரூ.1½ லட்சம் நிதி வழங்கப்பட்டது. 5 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவும், வெளிநாட்டில் வாழ்ந்தவர்களின் 3 குடும்பத்திற்கு மொத்தம் ரூ.5¾ லட்சம் நிதியும் வழங்கப்பட்டது. இந்த நிதியை கலெக்டர் ஷில்பா வழங்கினார்.
Related Tags :
Next Story