வியக்க வைக்கும் நினைவாற்றல்: இந்திய சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம்பிடித்த - 3 வயது குழந்தை


வியக்க வைக்கும் நினைவாற்றல்: இந்திய சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம்பிடித்த - 3 வயது குழந்தை
x
தினத்தந்தி 9 Sep 2019 11:35 PM GMT (Updated: 9 Sep 2019 11:35 PM GMT)

இந்திய சாதனையாளர்களின் புத்தகத்தில் வியக்க வைக்கும் நினைவாற்றலால் 3 வயது குழந்தை இடம் பிடித்துள்ளது.

பெங்களூரு,

இந்த புவி பந்தில் பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆவலுடன் இருக்கிறார்கள். ஆனால் அந்த சாதனை என்ற இலக்கை அடைய வாழ்க்கையில் நிறைய போராட்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது. சாதனை எதுவாக இருந்தாலும், அது அவ்வளவு எளிதாக நிகழ்த்திவிட முடியாது. 30 வயதிலோ, 40 வயதிலோ அல்லது 50 வயதிலோ அல்லது தடுமாறும் வயதிலோ சாதிப்பவர்களும் உண்டு. நாட்டில் 130 கோடி பேர் இருந்தாலும் இதில் சாதிப்பவர்கள் என்பது மிக சொற்பமே.

ஆனால் பிறந்த மூன்றே ஆண்டுகளில் சாதிக்க முடியுமா? என்று கேட்டால் முடியாது என்று சொல்பவர்கள் தான் அதிகமாக இருப்பார்கள். ஆனால் பெங்களூருவை சேர்ந்த ஒரு 3 வயது குழந்தை சாதனை படைத்துள்ளது. ஆனால் நினைவாற்றலில் அந்த குழந்தை அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் தேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. பெங்களூரு ஆர்.டி.நகரை சேர்ந்தவர் வி.விஜயகாந்தி. இவர் மலேசியாவில் ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

அவரது மனைவி வசந்தி அண்ணாமலை. சாப்ட்வேர் என்ஜினீயர். இவரும் மலேசியாவில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவர்களுக்கு 3 வயது 2 மாதத்தில் தருண் என்ற ஆண் குழந்தை உள்ளது. அந்த குழந்தை 2 வயதாக இருந்தபோது, நினைவாற்றல் இருப்பதை தாயார் வசந்தி அண்ணாமலை கண்டார்.

நண்பர்கள், உறவினர்கள் என பிறர், குழந்தையின் நினைவாற்றலை கூறும்போது வசந்தி அண்ணாமலை தான் நினைத்தது சரி தான் என்று உணர்ந்தார். அதன் பிறகு அவர் தனது வேலையை விட்டுவிட்டு, குழந்தையை பராமரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டார். கடந்த ஓராண்டுக்கு முன்பு கல்விக்காக தனது குழந்தையுடன் வசந்தி அண்ணாமலை பெங்களூரு வந்துவிட்டார்.

ஒரு முறை சொன்னால் அதை அப்படியே மனதில் நிறுத்தி கொள்கிறது அந்த குழந்தை. பழங்கள், காய்கறிகள் மற்றும் பொருட்களை பார்த்தவுடன் அவற்றின் பெயரை கடகடவென்று அந்த குழந்தை சொல்லிவிடுகிறது. இந்த நினைவாற்றல் குறித்த வீடியோக்களை குழந்தையின் தாயார், இந்திய சாதனையாளர்கள் புத்தக அலுவலகத்திற்கு அனுப்பினார்.

அந்த குழந்தையின் அபாரமான நினைவாற்றலை கவனித்த அதிகாரிகள், அந்த குழந்தையின் பெயரை, “அனைத்து வகையான அறிவாற்றல் பெற்றுள்ள குழந்தை“ என்ற தலைப்புடன் இந்திய சாதனையாளர்கள் புத்தகத்தில் சேர்த்துள்ளனர். மேலும் இந்திய சாதனையாளர்கள் புத்தகத்திலும் அந்த குழந்தை இடம் பெற்றுள்ளது. அதற்கான சான்றிதழ் அந்த குழந்தையின் பெற்றோரிடம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த குழந்தையின் தாயார் வசந்தி அண்ணாமலை கூறியதாவது:-

இன்னும் பள்ளிக்கே செல்லவில்லை. ஆனால் எனது குழந்தை தருண், ஆங்கிலத்தில் எவ்வளவு சிக்கலான வார்த்தையையும் சரியாக படிக்கிறான். 3 வயதுக்குரிய புத்தங்களை சரியாக வாசிக்கிறான். சூரியசக்தி தொடர்பான விஷயங்களில் அதிக ஆர்வம் செலுத்துகிறான். ஆங்கிலத்தில் எதுகை, மோனை வார்த்தைகளை சரியாக சொல்கிறான்.

மேலும் எனது குழந்தை, இந்திய சாதனையாளர்கள் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளான். “அபார நினைவாற்றல் கொண்ட திறமையான மற்றும் தானாகவே கற்கும் இளம் குழந்தை“ என்று அந்த புத்தகத்தில் கூறியுள்ளனர். மலேசியாவில் இருந்தபோது, எனது குழந்தை 1 வயது 2 மாதமாக இருந்தபோது, “ஸ்மார்ட் கிட்“ என்ற பட்டம் வழங்கப்பட்டது. ரூ.17 ஆயிரம் மதிப்புள்ள பரிசும் கிடைத்தது.

50 காய்கறிகள், 40 பழங்களை பார்த்து அவற்றின் பெயரை சொல்கிறான். விலங்குகளின் சத்தத்தை வைத்து அவற்றின் பெயரை கூறுகிறான். அனைத்து விண்வெளி கிரகங்களின் பெயரை சொல்கிறேன். முக்கோணம், சதுரம் உள்பட பல்வேறு வடிவங்களை அடையாளம் கண்டு சொல்கிறான். பாடவும் செய்கிறான்.

நான் வேலையை விட்டுவிட்டதால், சிறிய அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டாலும் கூட, எனது குழந்தையின் இந்த சாதனை எனக்கு முழு திருப்தியை அளிக்கிறது. வருகிற ஆண்டு தான் தான் பள்ளியில் சேர்க்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு வசந்தி அண்ணாமலை கூறினார்.

Next Story