திருவெண்ணெய்நல்லூர் அருகே, குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்


திருவெண்ணெய்நல்லூர் அருகே, குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 11 Sept 2019 3:45 AM IST (Updated: 10 Sept 2019 10:17 PM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூர் அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரசூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சரவணப்பாக்கம், கோவுலாபுரம் ஆகிய கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சரவணப்பாக்கத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும், கோவுலாபுரத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும் உள்ளது.

இந்த 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு ஆழ்துளை கிணறுகளில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றி 2 கிராம மக்களுக்கும் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டம் குறைந்ததால் சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் 2 கிராம மக்கள் முறையிட்டும் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை 11 மணியளவில் சரவணப்பாக்கம் கூட்டுசாலைக்கு திரண்டு வந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர். இதன் காரணமாக திருக்கோவிலூர்- மடப்பட்டு சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் மறியலை கைவிடவில்லை.

இதையடுத்து திருவெண்ணெய்நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராம் குமார் விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கூடுதலாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். இதனை ஏற்ற கிராம மக்கள் அனைவரும் காலை 11.30 மணியளவில் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.


Next Story