அடிப்படை வசதிகள் இல்லாத: ஆவடி மாநகராட்சி அலுவலகம் நடவடிக்கை எடுக்கக்கோரி - பொதுமக்கள் கோரிக்கை


அடிப்படை வசதிகள் இல்லாத: ஆவடி மாநகராட்சி அலுவலகம் நடவடிக்கை எடுக்கக்கோரி - பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 10 Sep 2019 11:00 PM GMT (Updated: 10 Sep 2019 4:49 PM GMT)

ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் குடிநீர், கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி செயல்பட்டு வருவதால், முறையாக பராமரித்து நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆவடி,

ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி கடந்த ஜூன் மாதம் 18-ந் தேதி சட்டசபையில் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. தற்போது ஆவடி மாநகராட்சியாக செல்பட்டு வரும் நிலையில், 48 வார்டுகள் உள்ளன.

இந்த நிலையில் மாநகராட்சி அலுவலக கட்டிடத்தில் உள்ள தரைத்தளத்தில் சுகாதார பிரிவு, என்ஜினீயரிங் பிரிவு, வரிவசூல் மையம், ஆணையர் அறை உள்ளிட்ட ஏராளமான அறைகள் உள்ளன.

முதல் தளத்தில் நகரமைப்பு பிரிவு, வருவாய் பிரிவு, ஆதார் மற்றும் இ-சேவை மையம் ஆகியவை உள்ளன. இந்த அலுவலகத்தில் 200-க்கும் மேற்பட்ட ஆண், பெண் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு வரி செலுத்துவதற்காகவும், ஆதார் மற்றும் இ-சேவை மையத்திற்கும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தினமும் வந்து செல்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் மாநகராட்சி அலுவலகம் சரியான முறையில் பராமரிக்கப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அலுவலகத்தில் கீழ்த்தளத்திலும், முதல் தளத்திலும் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு என்று ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என்று தனித்தனியாக கழிவறைகள் உள்ளது. இந்த கழிவறைகளில் உள்ள குழாய்கள் பல மாதங்களாக சேதம் அடைந்து கிடக்கின்றன. முறையாக பராமரிக்காததால் கழிவறைக்குள் உள்ளே நுழைய முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் அலுவலகத்தில் உடைந்த நிலையில் உள்ள நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்களை கழிவறைக்குள் குவித்து வைத்துள்ளனர். இதனால் அலுவலகத்திற்கு வரக்கூடிய பொதுமக்கள் கழிவறைகளை சரிவர பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையரிடம், அலுவலக ஊழியர்களிடமும் பொதுமக்களும் முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் ஆணையர் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

அதே போல், பொதுமக்களுக்காக கீழ்த்தள அலுவலகத்தின் நுழைவு நுழைவாயிலில் உள்ள குடிதண்ணீர் தொட்டி செயல்படாமல் பல மாதங்களாக கிடக்கின்றது. இதனால் அலுவலகத்திற்கு வரும் மக்கள் தாகத்திற்கு குடிக்க தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றனர்.

மேலும் மாநகராட்சி அலுவலகம் கட்டப்பட்ட போது, அதன் எதிரே இயற்கை அழகு கொஞ்சும் விதமாக பூங்கா அமைக்கப்பட்டது. தற்போது அந்த பூங்கா சரியான முறையில் பராமரிக்கப்படாமல், புதர் மண்டி கிடக்கிறது. பல நேரங்களில் மாடுகள் இங்கு நுழைந்து மேயக்கூடிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, ஆவடி மாநகராட்சியில் முறையான சுகாதாரமான கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story