காங்கிரஸ் கைவிட்டாலும், சித்தராமையாவுக்கு பா.ஜனதா துணை நிற்கும் மந்திரி சி.டி.ரவி பேட்டி


காங்கிரஸ் கைவிட்டாலும், சித்தராமையாவுக்கு பா.ஜனதா துணை நிற்கும் மந்திரி சி.டி.ரவி பேட்டி
x
தினத்தந்தி 10 Sep 2019 10:00 PM GMT (Updated: 10 Sep 2019 5:29 PM GMT)

சித்தராமையாவை காங்கிரஸ் கைவிட்டாலும், அவருக்கு பா.ஜனதா துணை நிற்கும் என்று மந்திரி சி.டி.ரவி கூறினார்.

மைசூரு, 

சித்தராமையாவை காங்கிரஸ் கைவிட்டாலும், அவருக்கு பா.ஜனதா துணை நிற்கும் என்று மந்திரி சி.டி.ரவி கூறினார்.

ஆலோசனை கூட்டம்

மைசூருவில் நேற்று மாவட்ட பொறுப்பு மந்திரியும், தசரா விழா பொறுப்பாளருமான சோமண்ணா, மந்திரி சி.டி.ரவி ஆகியோர் மைசூரு அரண்மனையில் தசரா விழா தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். கூட்டம் முடிந்த பின்னர் அரண்மனையில் வைத்து மந்திரி சி.டி.ரவி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவை தசரா விழாவுக்கு நீங்கள் அழைப்பீர்களா? என்று என்னிடம் பலர் கேட்கிறார்கள். சித்தராமையாவுடன் சேர்ந்துதான் தசரா விழாவை நடத்துவோம். சித்தராமையா தினமும் என்னுடனும், மந்திரி சோமண்ணாவுடனும் தொடர்பில் தான் இருக்கிறார். தசரா விழா அழைப்பிதழ் இன்னும் அச்சிடப்படவில்லை. தசரா விழா அழைப்பிதழில் சித்தராமையாவின் பெயர் உள்பட அனைத்து தலைவர்களின் பெயரும் இடம்பெறும். மேலும் அவரை நாங்கள்(தசரா விழா குழுவினர்) வீட்டிற்கே சென்று முறைப்படி அழைக்க திட்டமிட்டுள்ளோம். சித்தராமையா இந்த மண்ணின்(மைசூரு) மைந்தன். அவர்தான் தசரா விழாவின் சிறப்பு அழைப்பாளர். அவரை காங்கிரஸ் கட்சி கைவிட்டாலும் நாங்கள்(பா.ஜனதா) கைவிடமாட்டோம். சித்தராமையாவுக்கு பா.ஜனதா துணை நிற்கும்.

கிண்டல் செய்ததை கண்டிக்கிறேன்

ஊழல் நடைபெறவில்லை என்றால் பிறகு ஏன் பயப்பட வேண்டும். யார் ஊழல் செய்தார்களோ? அவர்களுக்குத்தான் பயம் இருக்கும். ஊழல் நடந்தது பற்றி விசாரணை நடத்துவது தவறா?. ஊழல் பற்றி விசாரணை நடைபெற்று வருவது குறித்து சித்தராமையா கிண்டலாக பேசியுள்ளார். அதற்கு என்ன பதில் சொல்வதென்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அவர் கிண்டல் செய்ததை நான் கண்டிக்கிறேன்.

சட்டத்திற்கு முன்பு பெரியவர் யாரும் இல்லை. அனைவரும் சமம். உணர்ச்சிப்பூர்வமாக யோசிப்பதை விட நடைமுறை செயல்பாடுகளை கண்டறிந்து அதன் அடிப்படையில் சிந்திக்க வேண்டும். என்னுடைய வீட்டில் சட்டவிரோதமாக ரூ.10 கோடி ரொக்கம் சிக்கினால் என்னால் நான் நேர்மையானவன் என்று சொல்ல முடியுமா?. என்னுடைய பெயரில் 18 ஏக்கர் நிலம் உள்ளது. அது 180 ஏக்கராக உயர்ந்தால் நான் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும். அதேபோல் அந்த நிலம் 1,880 ஏக்கராக உயர்ந்தாலும் நான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் நான் மக்கள் முன்பு பதில் சொல்ல மாட்டேன் என்று சொன்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியுமா?.

எதிர்ப்பு தெரிவிக்கவில்லை

கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜசாகர்) அணைப்பகுதியில் அதிநவீன வசதிகளுடன் சொகுசு பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு நாங்கள்(பா.ஜனதா) எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த திட்டம் சுற்றுலா துறைக்கு சம்பந்தப்பட்டது. சுற்றுலா துறைதான் இந்த திட்டத்தை நிர்வகித்து வருகிறது. இந்த திட்டத்திற்கான பட்ஜெட் எவ்வளவு என்று முடிவாகவில்லை.

என்னுடைய துறையில் இப்போது எவ்வளவு நிதி இருக்கிறது என்பதை என்னால் பகிரங்கமாக சொல்ல இயலாது. நான் ஒரு செயல்படாத மந்திரி என்று விமர்சித்தனர். இப்போது நானும், என்னுடைய துறை அதிகாரிகளும் வேகமாக செயல்பட்டு வருகிறோம்.

இவ்வாறு மந்திரி சி.டி.ரவி கூறினார்.

Next Story