நாட்டின் கலைகள், பாரம்பரியத்தை கலைஞர்கள் முன்னெடுத்துச்செல்ல வேண்டும் - கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு
நாட்டின் கலைகள், பாரம்பரியத்தை கலைஞர்கள் முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.
தஞ்சாவூர்,
தஞ்சை தென்னக பண்பாட்டு மையம், புதுடெல்லியில் உள்ள செங்கீத் நாடக அகாடமி இணைந்து கலைகளின் சங்கம திருவிழாவை தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் 5 நாட்கள் நடத்துகிறது. இதன் தொடக்க விழா நேற்று மாலை நடந்தது. தென்னக பண்பாட்டு மைய இயக்குனர் பாலசுப்பிரமணியம் வரவேற்றார்.
விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு கலைகளின் சங்கம திருவிழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர், சிறப்பு திறன் கொண்ட குழந்தைகளுக்கான கற்றல் அறையையும் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
வரலாற்றில் புகழ்பெற்ற இடமான, கலாசாரத்தின் புதையல் வீடான தஞ்சைக்கு வருகை தரும் வாய்ப்பை நான் ஒருபோதும் இழக்கவில்லை. தஞ்சையின் கலாசாரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலானது. சோழவம்ச மன்னர்கள் தங்கள் கம்பீர நினைவுச்சின்னங்களை விட்டுச்சென்று இருக்கிறார்கள். அதற்கு உதாரணம் தான் தமிழகத்தின் பண்டைய மற்றும் வளமான கட்டிடக்கலையை வெளிப் படுத்தும் பிரதீஸ்வரர் கோவில்.
தஞ்சை பெரிய கோவில், கட்டிடக்கலையின் உச்சம். தஞ்சை பெரியகோவிலை தட்சிணமேரூ என்று அழைப்பது வியப்புக்குரிய ஒன்றும் அல்ல, ஏனென்றால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கட்டிடக் கலைகளின் நுணுக்கங்களை தமிழர்கள் அறிந்து இருந்ததற்கான ஒரு சான்றாக இன்றளவும் சோழர்கள் கட்டிய இந்த வரலாற்று சின்னம் நிமிர்ந்து நிற்கிறது. சோழர்கள் காலத்துக்கு பிறகு இசை இப்பகுதியில் தழைத்தோங்கியது. அந்த வகையில் இந்த கலாச்சார விழா தஞ்சையில் நடத்தப்படுவது மிகவும் பொருத்தமானது.
இது போன்ற கலை விழாக்கள் நாட்டின் பல்வேறு கலைகளை போற்றி பாதுகாக்கும் கலைஞர்களுக்கும், மக்களுக்கும் இடையேயான நெருக்கத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. நாட்டின் அளப்பரிய கலைகள் மற்றும் பாரம்பரியத்தை கலைஞர்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும். மேலும், இது போன்ற விழாக்கள் இளம் கலைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தவும், மெருகூட்டிக் கொள்வதற்கும் மேடையாக பயன்படுகிறது.
தமிழகத்தின் நாட்டுப்புறக் கலைகள் மற்றும் தமிழ் இசை குறித்த குறிப்புகள் சங்க கால இலக்கியங்களில் பரவலாக கிடைக்கிறது. 6-ம் நூற்றாண்டு முதல் 10-ம் நூற்றாண்டு வரை தெய்வீக தமிழ் இசை தமிழகத்தில் தழைத்தோங்கியது. ஆழ்வார்கள், நாயன்மார்கள், அருணகிரிநாதர் மூலமாக பக்தி இசையின் உருவாக தமிழ் இசை தழைத்தோங்கியது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சர் துரைக்கண்ணு, வைத்திலிங்கம் எம்.பி., கலெக்டர் அண்ணாதுரை, சங்கீத நாடக அகாடமியின் தலைவர் சேகர்சென், தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் சங்கீத் நாடக அகாடமியின் துணைத்தலைவர் அருணாசாய்ராம் நன்றி கூறினார்.
விழாவினை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த கலைவிழா வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது. தினமும் காலையில் கருத்தரங்கமும், மாலையில் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
இதில் பாரம்பரிய இசை, நடனம், தோல்பாவை கூத்து, மலைவாழ் மக்களின் நடனம், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொள்கிறார்கள்.
விழாவில் பங்கேற்ற கவர்னர் பன்வாரிலால் புரோகித் தஞ்சை மேலவீதியில் உள்ள மூலை அனுமார் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் காரில் திருச்சி புறப்பட்டு சென்றார்.
Related Tags :
Next Story