16 மாத ஆண் குழந்தையை கொன்ற தாய் கைது கணவருடன் ஏற்பட்ட தகராறால் விபரீதம்


16 மாத ஆண் குழந்தையை கொன்ற தாய் கைது கணவருடன் ஏற்பட்ட தகராறால் விபரீதம்
x
தினத்தந்தி 10 Sep 2019 10:30 PM GMT (Updated: 10 Sep 2019 6:18 PM GMT)

கொப்பல் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் 16 மாத ஆண் குழந்தையை கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு, 

கொப்பல் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் 16 மாத ஆண் குழந்தையை கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.

கணவன்-மனைவி தகராறு

கொப்பல் மாவட்டம் காரடகி தாலுகா சோமனாலா கிராமத்தைச் சேர்ந்தவர் சசீதர். இவருடைய மனைவி பிரதீமா என்ற கவிதா. இந்த தம்பதிக்கு 16 மாதங்கள் மட்டுமே ஆன அபினவ் என்ற மகன் இருந்தான். சசீதர் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இவர் தனக்கு கிடைக்கும் சம்பளத்தை பிரதீமாவிடம் கொடுப்பது இல்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனம் உடைந்த பிரதீமா ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர் உயிர் பிழைத்தார். இருப்பினும் பிரதீமாவுக்கும், சசீதருக்கும் இடையேயான தகராறு முடியவில்லை. தகராறின்போது தனது மகனை கொன்று தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அடிக்கடி பிரதீமா மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

மகன் கொலை

நேற்று முன்தினம் காலையிலும் அவர்களுக்குள் சம்பள விஷயம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு சசீதர் வேலைக்கு புறப்பட்டு சென்றார். இதனால் வீட்டில் பிரதீமா தனது மகன் அபினவுடன் மட்டும் இருந்தார். இரவில் பணியை முடித்துவிட்டு சசீதர் வீட்டுக்கு வந்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

வீட்டில் உள்ள அறையில் இருந்த பிரதீமா தனது மகன் அபினவை கழுத்தை நெரித்தும், வாய், மூக்கு ஆகியவற்றை பொத்தியும் மூச்சை திணறடித்து கொன்றதாக சசீதரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சசீதர் கதறி அழுதார்.

கைது

இதுபற்றி அறிந்தவுடன் காரடகி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அபினவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மகனை கொலை செய்ததாக பிரதீமாவை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து காரடகி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் அபினவை காலையிலேயே கொலை செய்த பிறகு பிணத்துடன் இரவு வரை வீட்டிலேயே பிரதீமா இருந்ததும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story