மாவட்ட செய்திகள்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெலகாவியில்முதல்-மந்திரி எடியூரப்பா சுற்றுப்பயணம் + "||" + In the rain-flooded Belagavi Chief-Minister Yeddyurappa Tour

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெலகாவியில்முதல்-மந்திரி எடியூரப்பா சுற்றுப்பயணம்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெலகாவியில்முதல்-மந்திரி எடியூரப்பா சுற்றுப்பயணம்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெலகாவி மாவட்டத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று சுற்றுப்பயணம் செய்தார்.
பெங்களூரு, 

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெலகாவி மாவட்டத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று சுற்றுப்பயணம் செய்தார். அப்போது வீடுகளை இழந்துள்ள குடும்பத்தினர் புதிய வீடு கட்டும் வரை வாடகை வீட்டில் வசிக்க ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் மாதம்தோறும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஏராளமான மக்கள் வீடுகளை இழந்து உள்ளனர்.

நிவாரண உதவிகள்

இந்த நிலையில் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெலகாவி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

“பெலகாவி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்திற்கு 1 லட்சத்து 12 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களில் 1 லட்சத்து 10 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அவர்களுக்கு புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.

ஆதங்கப்பட தேவை இல்லை

வீடுகள் கட்டுவதற்கான அடித்தளம் அமைக்க முதல் கட்டமாக ரூ.1 லட்சம் வழங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். வீடுகள் கட்ட தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும். வீடுகள் சேதம் அடைந்திருந்தால் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். வீடுகளை இழந்தவர்களின் வசதிக்காக தற்காலிக தங்கும் கூடாரங்கள் அமைத்து கொடுக்கப்படும். வாடகை வீடுகளில் தங்க விரும்புபவர்களுக்கு புதிய வீடுகள் கட்டும் வரை மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

பெலகாவி மாவட்டத்தில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால், நிவாரண பணிகளை மேற்கொள்வதில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் நிவாரண பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சேதங்கள் குறித்து ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த அறிக்கை வந்ததும், நிவாரண பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்படும். எக்காரணம் கொண்டும் யாரும் ஆதங்கப்பட தேவை இல்லை.

டெல்லி பயணம் ரத்து

வெள்ள நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசு தாமதம் செய்வதாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. மத்திய குழு ஆய்வு செய்து அறிக்கை வழங்கியுள்ளது. அந்த அறிக்கையை பரிசீலித்து நிதி உதவியை மத்திய அரசு வழங்கும். மத்திய அரசு எதிர்பார்ப்பை மீறி அதிகளவில் நிதி உதவி வழங்கும். இதுபற்றி யாரும் கவலைப்பட தேவை இல்லை.

மகதாயி நதிநீர் பிரச்சினை குறித்து கோவா முதல்-மந்திரியுடன் பேச நேரம் ஒதுக்குமாறு கேட்டுள்ளேன். நேரம் கிடைத்ததும், கோவாவுக்கு சென்று முதல்-மந்திரியை சந்திப்பேன். இந்த பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு தயாராக உள்ளது. இன்று (நேற்று) டெல்லிக்கு செல்ல திட்டமிட்டிருந்தேன். ஆனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்ததால், டெல்லி பயணத்தை ரத்து செய்தேன்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

எடியூரப்பாவின் கார் முற்றுகை

முதல்-மந்திரி எடியூரப்பா சுரேபான் கிராமத்தில் மக்களின் குறைகளை கேட்க முடிவு செய்திருந்தார். இதனால் சாலையோரம் அந்த கிராம மக்கள் குவிந்திருந்தனர். ஆனால் நேரம் ஆகிவிட்டதாக கூறி எடியூரப்பா அங்கு மக்களை சந்திக்காமல் செல்ல முடிவு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கிராம மக்கள், எடியூரப்பாவின் காரை முற்றுகையிட்டனர். உடனே போலீசார் அந்த மக்களை விலக்கி, எடியூரப்பாவின் காரை அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை