சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு? கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் இன்று டெல்லி பயணம்


சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு? கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் இன்று டெல்லி பயணம்
x
தினத்தந்தி 11 Sept 2019 4:15 AM IST (Updated: 11 Sept 2019 12:37 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு என்பது குறித்து விவாதிக்க கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் இன்று (புதன்கிழமை) டெல்லி செல்கிறார்கள்.

பெங்களூரு, 

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு என்பது குறித்து விவாதிக்க கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் இன்று (புதன்கிழமை) டெல்லி செல்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்ற சித்தராமையா, எச்.கே.பட்டீல் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

குமாரசாமி அரசு கவிழ்ந்தது

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி அரசு நடந்தது. சித்தராமையா, கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும் அவர் சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவராகவும் இருந்தார். முதல்-மந்திரி பதவியை இழந்த பிறகும் காங்கிரசில் பலம் வாய்ந்த தலைவராக சித்தராமையா வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கூட்டணி கட்சிகளின் 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா அரசு அமைந்துள்ளது. இந்த புதிய அரசு அமைந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. சட்டசபையில் காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை அக்கட்சி மேலிடம் இன்னும் அறிவிக்கவில்லை.

20 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு

இந்த நிலையில் இதுகுறித்து விவாதிக்க கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, பிரசார குழு தலைவர் எச்.கே.பட்டீல் உள்ளிட்டோர் இன்று (புதன்கிழமை) டெல்லி செல்கிறார்கள். அங்கு அக்கட்சியின் அகில இந்திய தலைவி சோனியா காந்தியை சந்தித்து பேச உள்ளனர்.

எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு சித்தராமையா, எச்.கே.பட்டீல் ஆகியோர் இடையே போட்டி எழுந்துள்ளது. எச்.கே.பட்டீலுக்கு 20 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு சித்தராமையாவுக்கு உள்ளது. அதனால் சித்தராமையாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Next Story